இலங்கை மற்றும் போர்த்துக்கல் இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து பிரதமர் கவனம்

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் போர்த்துக்கல் தூதுவர் ஜோவா மானுவல் மெண்டெஸ் டி அல்மேடா அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன் தினம் (06) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

போர்த்துக்கல் மக்கள் மத்தியில் இலங்கையை ஒரு சாதகமான சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான பரந்த விளம்பரத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இதன்போது முன்மொழிந்தார்.

போர்த்துக்கல் சுற்றுலாப் பயணிகளை இந்தியாவிற்கு வரவழைப்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட ’லிஸ்பனில் இருந்து கோவா வரையிலான 19 ஆம் நூற்றாண்டின் கிழக்குப் பயணம்’ போன்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், இலங்கையையும் ஒரு சாதகமான சுற்றுலாத் தலமாக போர்த்துக்கல் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு வாய்ப்புள்ளதால், போர்த்துக்கல் லிஸ்பனில் இருந்து காலி வரை என்ற அத்தகைய திட்டம் சாத்தியமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருபது வருடங்களுக்கு முன்னர் தானும் உல்லாசப் பயணியாக காலிக்கு வந்திருந்ததை நினைவுகூர்ந்த தூதுவர், போர்த்துக்கல் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்குத் தேவையான அனைத்து காரணிகளும் இலங்கையிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கையின் வாசனைத் திரவியங்கள் போன்றவற்றுக்கு போர்த்துக்கல்லில் அதிக சந்தை வாய்ப்புகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன மற்றும் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.



பிரதமர் ஊடகப் பிரிவு