இந்த நாட்டில் இருந்து வெறிநாய் நோயை ஒழிப்பது தொடர்பாக, பிரதமருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் விலங்கு நலன்புரி பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

இலங்கையிலிருந்து வெறிநாய் நோயை முழுமையாக ஒழித்தல், விலங்கு நலவாழ்வை உறுதிசெய்தல் மற்றும் வீதி விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல் என்பவற்றுக்காகச் சிறந்த முறைமைசார்ந்த விரைவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி விலங்கு நலவாழ்வு அமைப்பான ’Battersea’ மற்றும் சர்வதேச துணை விலங்கு முகாமைத்துவக் கூட்டமைப்பு (ICAM - UK) என்பவற்றைச் பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஜூலை 21, பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இதுவரை செயலில் இருந்து வந்த 70% தடுப்பூசி ஏற்றல் இலக்கிற்குப் பதிலாக, குறுகிய காலத்திற்குள் அதிகளவிலான நாய்களுக்கு 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய தடுப்பூசியை வழங்கும் ’No Dog Left Behind’ எனும் புதிய முறைமையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இப்பிரதிநிதிகள் குழு இதன்போது சுட்டிக்காட்டியதுடன், இதன் மூலம் தற்போது வெறிநாய் நோய் தடுப்பூசிகளுக்காக (Post-Exposure Prophylaxis) செலவிடப்படும் அதிக செலவீனத்தைக் குறைத்துக்கொள்ள முடியும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டினர்.

கால்நடை வைத்தியர்களின் பற்றாக்குறை மற்றும் நிர்வாகச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காக, உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாகப் பயிற்சி அளித்துத் தடுப்பூசி ஏற்றல் பணிகளில் ஈடுபடுத்துவது குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

முதலில் மேல் மாகாணத்திற்குள்ளும், பின்னர் நாடு முழுவதிலும் இதனை விரிவுபடுத்துவதற்கும், இதனை ஒரு தேசியப் பணியாகக் கருதி நேரடியாகவும் வினைத்திறனுடனும் வழிநடத்துவதற்கு ’ஜனாதிபதி பணிக்குழு’ (Presidential Task Force) ஒன்றை அமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

வெறிநாய் நோயை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு உயர் தரத்திலான தடுப்பூசைகளைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம், தடுப்பூசிகளுக்கான குளிர்சாதன விநியோகச் சங்கிலியைப் (Cold chain) பாதுகாப்பாகப் பேணுதல் மற்றும் மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வையின் அவசியம் குறித்தும் நிபுணர்கள் இதன்போது தெளிவுபடுத்தினர்.

விலங்கு நலவாழ்வு மற்றும் வெறிநாய் நோயை ஒழிப்பது அரசாங்கத்தின் முதன்மை முன்னுரிமையாகும் என்றும், தற்போதைய நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்துக்கொண்டு உள்ளூராட்சி மன்றங்கள், சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த தேசியத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் Battersea அமைப்பின் பிரதிநிதி Ms. Roxanne Sahar Nazir மற்றும் ICAM அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி Dr. Elaine Francisca Hiby, Dr. Eric Joseph Brum, Mr. Patrick Gerard மற்றும் கொழும்பு மாநகர சபையின் தலைமைச் சுகாதாரக் கால்நடை வைத்தியர் Dr. M. Ijas ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு