​பிரதமரின் பங்கேற்புடன் ஹொரண ரஜமஹா விகாரையின் நவம் மகா பெரஹரா ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க ரைகம் கோரளை, ஹொரண ரஜமஹா விகாரையின் 2026ஆம் ஆண்டுக்கான நவம் மகா பெரஹரா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்று (14) ஆரம்பமானது.

நாட்டின் பௌத்த வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், புத்தபெருமானின் சர்வக்ஞ புனிதச் சின்னங்கள் மற்றும் உபுல்வன் ஸ்ரீ விஷ்ணு தெய்வத்தின் உருவச்சிலையைத் தாங்கிய மகா பெரஹரா, இம்முறையும் மிக விமரிசையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரதமர் அவர்களால் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்டு, மலர் பூசை செய்ததைத் தொடர்ந்து பெரஹரா வீதி உலா ஆரம்பமானது.

இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் பின்வருமாறு குறிப்பிட்டார், சங்கமித்தா அரஹத் தேரரினால் கொண்டுவரப்பட்ட போதி மரக்கிளையின் ஆசிர்வாதம் பெற்ற இந்த புண்ணிய பூமியானது, இரண்டாம் பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் தேவப்பதிராஜ அமைச்சரினால் புனரமைக்கப்பட்ட மிகவும் புனிதமான இடமாகும். ஒரு காலத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில், பல்கும்புரே அத்ததஸ்ஸி நாயக்க தேரர் உள்ளிட்ட விகாரையின் விகாராதிபதிகளின் தளராத முயற்சியினால் மீளக் கட்டியெழுப்பப்பட்ட இவ்விகாரையானது, இன்று இப்பிரதேசத்தின் மத மற்றும் கலாசார எழுச்சியின் மையமாகத் திகழ்கின்றது.

​அத்துடன், இந்த விகாரையுடன் இணைந்த ஹொரண வித்யாரத்ன பல்கலைக்கழகப் பீடம் (பிரிவெனா), நாட்டின் புத்தசாசன மற்றும் கல்வி வரலாற்றில் மகத்தான பணியை ஆற்றியுள்ளதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் விகாராதிபதி மதுராவல சோபித நாயக்க தேரர், லபுகம நாரத நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பிரதேச வாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு