“அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தை உயரிய தொழில்நுட்பம் மற்றும் நவீன பாதுகாப்பு அச்சக ஆற்றல்களுடன் பலப்படுத்துவதற்கும், 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான இயந்திரங்களைப் படிப்படியாக அகற்றி, புதிய உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில், செப்டம்பர் 08ஆம் திகதி எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போது பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் தற்போது 445 நிரந்தர ஊழியர்களும் 21 ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.

பாடசாலைப் பாடநூல்கள், மாகாண வினாத்தாள்கள், அதிர்ஷ்டச் சீட்டுகள், இரகசிய ஆவணங்கள், பயிற்சிப் புத்தகங்கள், தேர்தல் அச்சுப் பணிகள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறையின் வர்த்தக அச்சுப் பணிகள் பல கூட்டுத்தாபனத்தினால் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அத்தோடு, சந்தை விலை மற்றும் தரத்தைக் கட்டுப்படுத்துதல், நம்பகமான பாதுகாப்பான அச்சகப் பிரிவொன்றின் தேவையைப் பூர்த்தி செய்தல், அரசாங்கத்தின் அச்சுச் செலவினங்களைக் குறைத்தல் மற்றும் அரசாங்கத்திற்குத் தேவையான பங்களிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல சாதகமான சேவைகளை இக்கூட்டுத்தாபனம் பெற்றுத் தருகின்றது" எனக் குறிப்பிட்டார்.

முறையான கொள்முதல் நடைமுறையினூடாக எந்தவொரு நிறுவனமும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அச்சுப் பணிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்ட பிரதமர், தற்போதைய கூட்டுத்தாபனத்தின் வினைத்திறனை மேலும் அதிகரிப்பதே அரசாங்கத்தின் முதன்மை இலக்காக இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு