இத் துறை சார்ந்தோர்க்கு நியாயமான ஊதியத்தையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தையும் உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான திட்டங்களின் முதலாவது முயற்சியாக இது அமைகின்றது.
கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்ற தேசியத் தேயிலைச் செயலமர்வின் (National Tea Symposium - InTSym100) அங்குரார்ப்பண விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் இந்தக் கருத்தினைத் தெரிவித்தார்.
இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (Tea Research Institute of Sri Lanka), 1925ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து இந்த ஆண்டுடன் நாட்டிற்காக ஆற்றிய ஆராய்ச்சிப் பணியின் நூற்றாண்டைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இந்த நிறுவனம் நவம்பர் 10–11 திகதிகளில் கொழும்பு சினமன் கிராண்டில் "சிறந்த சுவைத்தல்: புத்தாக்கங்கள், நிலைத்தன்மை மற்றும் வாழ்க்கை முறைகளை இணைத்தல்" எனும் தலைப்பில் சர்வதேசத் தேயிலைச் செயலமர்வு 2025 ஐ நடத்துகின்றது.
இந்த நிகழ்வானது உலகெங்கிலும் வசிக்கும் விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, அறிவைப் பகிர்ந்துகொள்ளவும், புத்தாக்கங்களைப் பற்றி ஆராய்வதற்கும், கூட்டு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் தேயிலைத் தொழிலின் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கும் உதவுகிறது.
இந்நிகழ்வில் புதிய தேயிலை இரகமான ’TRI 5000’ பிரதமருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
"இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை உற்பத்தியானது தொடர்ந்தும் ஒரு முக்கியமான பகுதியாகவே இருந்து வருகின்றது. இதன் மூலம் விவசாய ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 10 சதவீதப் பங்களிப்பை வழங்குவதோடு, சுமார் இருபது இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தையும் பெற்றுக் கொடுக்கின்றது. இதன் பொருளாதாரப் பங்களிப்புக்கு அப்பால், தேயிலை என்பது நமது நிலம், கலாச்சாரம் மற்றும் சமூகங்கள் ஆகியவற்றுடன் ஆழமாக வேரூன்றி இருக்கின்றது. தேயிலைத்துறையானது சிறு தோட்ட உரிமையாளர்கள் மற்றும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முதல் உற்பத்தியாளர்கள், பொதி செய்பவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் வரை இந்தத் துறை சார்ந்த சகல குடும்பங்களையும் தாங்கி நிற்கிறது.
இலங்கையின் தேயிலை உற்பத்தியில் சுமார் 90 சதவீதம் 140க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, உலகத் தேயிலை அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருவதோடு, சிலோன் தேயிலையின் தரம் மற்றும் நம்பகத்தன்மைக்காக சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றிருக்கின்றது. அரசாங்கம் என்ற வகையில், இந்த முன்னேற்றத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதை நாம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றோம். அத்தோடு, 2030ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் கிலோகிராம் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலை மற்றும் 2.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி வருமான இலக்கை அடைய வேண்டுமென எதிர்பார்க்கின்றோம்.
அதே நேரத்தில், தேயிலைத் தொழிலின் மனித வள பங்களிப்பினையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். கொழுந்துப் பறிப்பது முதல், உற்பத்தி, ஆராய்ச்சி, நிர்வாகம் வரை பெண்கள் நீண்ட காலமாக முக்கியப் பங்களிப்பினை வழங்கி வருகின்றார்கள். அத்தோடு இந்தத் துறையின் தொழிலாளர் தொகுதியில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் பெண்களாக உள்ளனர். கோவிட்-19 தொற்றுநோய்களின்போது, ஏனைய சமூகத்தினர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையிலும், இவர்கள் தொடர்ந்தும் உழைத்து, அரசுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுத்தார்கள். இவர்களின் இந்த பங்களிப்பைப் பாராட்ட வேண்டும். பாம்புக் கடி முதல் கொழுந்துப் பறிக்கும்போது ஏற்படும் காயங்கள் வரை அவர்கள் குறிப்பிடத்தக்க கஷ்டங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள். பலர் இன்னும் சரியான வீடமைப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு வசதிகள் கிடைக்காமை போன்ற சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பெண்களுக்குக் கல்வி, பயிற்சி, பாதுகாப்பான வேலைச் சூழல், நியாயமான ஊதியம் மற்றும் சமமான பதவி உயர்வு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதில் எமது அரசாங்கம் உறு கொண்டுள்ளது. அண்மையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள், நீண்ட காலமாகச் சொத்துரிமை மறுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கு 2,000 வீட்டு உறுதிகளை வழங்கிவைத்தார். இது அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் பெற்றுக் கொடுக்கின்றது.
நவம்பர் 7ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவுசெலவுத் திட்டத்தில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த ஊதியத்தை ரூபா 1,350இல் இருந்து ரூபா 1,750 ஆக அதிகரிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டிருக்கின்றது. இதில் நாளாந்த அடிப்படை ஊதியம் 1,550 ரூபாவாக அதிகரிப்பதோடு, அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட 200 ரூபாய் நாளாந்த வருகை ஊக்குவிப்புச் சலுகையும் அடங்கும். இது 2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது. இந்தத் துறை சார்ந்தவர்களுக்கு நியாயமான ஊதியம் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதற்கான எமது முயற்சிகளின் ஆரம்பத்தையே இது குறிக்கிறது.
அதே நேரத்தில், தேயிலைத் துறையை மேலும் முன்னேற்ற வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இந்தத் துறையை மேலும் நிலைத்தன்மை, போட்டித்தன்மை ஆகியன மிக்கதாக மாற்றுவதே எமது நோக்கமாகும்" என பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் திரு. சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் திரு. சுந்தரலிங்கம் பிரதீப், அமைச்சின் செயலாளர் திரு. பிரபாத் சந்திரகீர்த்தி உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு