ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்விச் சீர்திருத்தங்களுக்கு இணையாக உயர்கல்வித் துறையிலும் பாரிய மாற்றங்களை ஏற்படுத்துவோம். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வித் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப, உயர்கல்வித் துறையிலும் தேவையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மே மாதம் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுகத் ரத்நாயக்க எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,

இதற்காக நியமிக்கப்பட்ட நிபுணத்துவ குழு கடந்த ஆறு மாத காலமாகத் தனது பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த நிபுணத்துவ குழுவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, உயர்கல்வித் துறையில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு தேவையான சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும்.

2025 ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 281,810 ஆகும். அவர்களில் 176,538 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். பாடத்துறைகளின் அடிப்படையில் தகுதி பெற்ற மாணவர்கள், உயிரியல் 32,935, பௌதிகவியல் 23,012, வர்த்தகம் 39,608, கலை 58,269, பொதுப் பாடத்துறை 4,199, பொறியியல் தொழில்நுட்பவியல் 12,472, உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பவியல் 6,043. இம்மாணவர்களில் 42,937 பேர் பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.

கல்வியின் தரத்தைப் பாதுகாத்து, பல்கலைக்கழக மாணவர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகின்றது. கடந்த ஆண்டுகளைப் போன்றே இம்முறையும் முதலாம் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை மாற்றமின்றிப் பேணுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2025/2026 கல்வி ஆண்டு முதல் உருகுணை பல்கலைக்கழகத்தில் ’புவியியல் தகவல் கட்டமைப்பு’ பாடநெறியும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ’இலத்திரனியல் மற்றும் நுண்ணறிவு அமைப்புப் பொறியியல்’ பாடநெறியும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த இரண்டு புதிய பாடநெறிகளுக்கும் தலா 50 மாணவர்கள் வீதம் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதுடன், இதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு, பதிவு செய்யப்பட்ட மாணவர் பெயர்ப்பட்டியல்களைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

முன்பள்ளிக் கல்வி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் கே. காதர் மஸ்தான் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த பிரதமர்,

நாட்டின் பெரும்பாலான முன்பள்ளிகள் தனியார் துறையினரால் நிர்வகிக்கப்படுவதால், அவர்களுக்கு நிரந்தர நியமனங்கள் அல்லது சம்பளம் வழங்குவதற்கு அமைச்சிற்குத் தற்போதைய நிலையில் சந்தர்ப்பம் இல்லை. எனினும், மாகாண சபைகளின் கீழ் உள்ள தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளின் தொண்டர் ஆசிரியர்களுக்குக் கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

2027 ஆம் ஆண்டளவில் ஒட்டுமொத்த முன்பள்ளிக் கல்வி முறையையும் மாற்றியமைப்பதற்கான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சும், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சும் இணைந்து முன்னெடுத்து வருகின்றன.

இதற்கு மேலதிகமாக, தேசிய கல்வி ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் முன்பள்ளிக் கல்வியை முறைப்படுத்துவதற்கான தேசியக் கொள்கையொன்று 2026 ஆம் ஆண்டில் நிறுவப்படவிருக்கின்றது. இதன் கீழ் ஆசிரியர் வழிகாட்டிகள் மற்றும் மாதிரிச் செயற்பாட்டுத் தொகுப்புகள் தயாரிக்கப்பட்டு, மாகாண மட்டத்தில் ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளன எனக் கூறிய பிரதமர், தொண்டர் ஆசிரியர்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், 2007.01.04 திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, நிர்ணயிக்கப்பட்ட 4,700 ஆசிரியர் உதவியாளர்களைத் தவிர வேறு எந்தவொரு தொண்டர் ஆசிரியரையும் பணியில் அமர்த்துவதில்லை என எடுக்கப்பட்ட முடிவு தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பதை வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு