இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் ஜப்பான் நம்பிக்கை...

கடுமையான பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட இலங்கை திருப்திகரமான ஆரம்ப மீட்சியை அடைந்துள்ள நிலையில், இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பில் ஜப்பான் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கமிகாவா யோகோ (Kamikawa Yoko) தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவை இன்று (2024.05.04) கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கும் சர்வதேச நாணய நிதியம் (IMF), பாரிஸ் கிளப் மற்றும் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஏனைய நன்கொடை நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் முன்னேற்றம் குறித்து பிரதமர் இலங்கை வந்துள்ள ஜப்பானிய வெளியுறவு அமைச்சருக்கு விளக்கினார்.

குறைந்த வருமானம் பெறும் மற்றும் நலிவடைந்த பிரிவினரை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பிரதமர் விளக்கினார்.

அமைச்சர் கமிகவா யோகோ (Kamikawa Yoko) இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை பாராட்டியதுடன், சீனா மற்றும் தனியார் கடன் வழங்குநர்களுடன் மறுசீரமைப்பு செயல்முறையை இலங்கை துரிதப்படுத்தும் என்று ஜப்பான் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

முன்மொழியப்பட்டுள்ள அனுராதபுரம் மகாவிஹார பல்கலைக்கழகம் உட்பட பௌத்த மத நிலையங்களுக்கு ஜப்பான் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த பிரதமர், பௌத்த பஞ்சாங்கத்தின் மிகவும் புனிதமான வெசாக் மாதத்தில் ஜப்பானிய அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வது விசேடமானது எனவும் தெரிவித்தார்.

வெளிவிவகார அமைச்சர் கமிகவா யோகோ (Kamikawa Yoko) அவர்களுடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் திரு மிசுகோசி ஹிடேகி அவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இராஜாங்க அமைச்சர்களான தாரக பாலசூரிய, சுரேன் ராகவன், பியல் நிஷாந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் மேலதிக செயலாளர் ஹர்ஷ விஜேவர்தன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எச். டி. கருணாரத்ன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு