ஓய்வூதிய கணக்கின் கடனைச் செலுத்தி கணக்கை சுயாதீனமாக வைத்திருக்க திறைசேரி இடமளித்துள்ளது. - பிரதமர் தினேஷ் குணவர்தன

நாம் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்களுடன் நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டும்.

இன்று (01.01.2024) கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், புத்தாண்டு பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். மத வழிபாடுகளைத் தொடர்ந்து அரச ஊழியர்கள் உறுதிமொழி வழங்கும் நிகழ்வும் இதன் போது இடம்பெற்றது.

மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்-

தேசத்தை கட்டியெழுப்புவதில் நாங்கள் உறுதியான பங்காளர்கள் ஆவோம். நாம் கடந்த காலத்தை கடந்து, நிகழ்காலத்தில் இருந்து எதிர்காலத்தை நோக்கி உறுதியாக அடியெடுத்து வைக்க வேண்டும். எத்தகைய செய்திகள் பரவிய போதும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. ஓய்வு பெற்ற எந்த ஒரு அரச ஊழியருக்கும் ஓய்வூதியம் நிறுத்தப்படவில்லை. ஓய்வூதியக் கணக்கின் கடனைச் செலுத்திய பின்னர் கணக்கை சுயாதீனமாக்குவதற்கான வாய்ப்பை திறைசேரி வழங்கியுள்ளது என்பதை மீண்டும் அரச ஊழியர்களுக்கு நினைவுபடுத்துகின்றேன்.

எங்களின் கடினமான காலங்களில் சர்வதேச நண்பர்கள் எங்களுக்கு ஆதரவளித்தனர். கோவிட் தொற்றுநோய்க்குப் பின்னர் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த மோசமான சரிவிலிருந்து மீள சர்வதேச நண்பர்கள் எங்களுக்கு உதவினார்கள். அந்தச் சவாலை முறியடிக்கும் நடவடிக்கையில் ஜனாதிபதி, பிரதமர் என்ற வகையில் நான், அமைச்சரவை மற்றும் பாராளுமன்றம் அரச சேவைகள் மீதும் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள எமது மக்கள் மீதும் வைத்த நம்பிக்கை வெற்றியளித்துள்ளது.

எமது நாட்டின் விவசாயிகளினால் உணவில் தன்னிறைவு பெறக்கூடிய தாய்நாட்டை உருவாக்க முடிந்துள்ளது. ஏனைய துறைகளிலும் எமக்கு இருந்த நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார தடைகளை நீக்க பிரதமரின் செயலாளர் உட்பட உங்கள் அனைவரின் ஆதரவும் அர்ப்பணிப்பும் புத்தாண்டில் சிறப்பாக நிறைவேறும் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் வளமானதும் சுபீட்சமானதுமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வழங்கிய உறுதிமொழியின்படி, வறுமையற்ற அபிவிருத்திக்கு வழிவகுக்கும் ஒரு நாட்டைக் கட்டியெழுப்பும் இலட்சியத்தில் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம். பிரதமர் அலுவலகம் என்ற வகையில் நாங்கள் எப்போதும் அதற்கு ஆதரவாக நிற்கிறோம்.

கடந்த ஆண்டை விட நீங்கள் அனைவரும் மிகுந்த தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் உங்களது கடமைகளை ஆற்றக்கூடிய ஒரு புதிய ஆண்டில் நாம் நுழைகிறோம். மனித வாழ்வில் பல விடயங்களை விரைவில் மறந்து விடுகிறோம். கஷ்டங்கள், பலவீனங்கள் மற்றும் கடுமையான சூழ்நிலைகளை வெற்றிகொள்வதன் மூலம் நம் வாழ்க்கையை எளிதாக்குவதற்கான தேவைக்காக நாம் அனைவரும் உழைப்போம். எமது பணிகளிலும் பொதுவாகவும் முழு சமூகமும் காணும் எதிர்காலத்தை அடைவதற்கான பாதையை மீண்டும் வலுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையுடன் இன்று நாம் முன்னேறி வருகிறோம்.

அரசாங்கம் வழங்கும் ஆதரவு மற்றும் வழிகாட்டுதலின் அடிப்படையில் தாய்நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப கைகோர்த்து செயற்படுவோம்.

இந்த நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் பிரதமர் அலுவலக ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு