கலைக்காக நீண்ட கால முதலீடுகளை செய்து கலையின் மூலம் வாழக்கூடிய சூழ்நிலை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பெப்ரவரி 06 ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற 44 ஆவது இளைஞர் விருது விழாவில் விருதுகளை வென்றவர்களை வாழ்த்தி உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய.
ஒரு கலைப் படைப்பில் இருந்து நாம் எதிர்பார்ப்பது இரசனை உணர்வைப் போன்றே பார்வையாளர்களை சிந்திக்கத் தூண்டுவதும், சமூகத்திற்குச் ஏதேனும் ஒரு செய்தியை அதன் மூலம் வழங்குவதுமாகும். இதன் மூலம், பார்வையாளர் அல்லது அதனை பயன்படுத்துபவர் போன்றே படைப்பாளர்களும் திருப்தி அடைகிறார்கள். ஆனால் சில படைப்புகள் பார்வையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. அந்த அசௌகரியத்தின் மூலமும் சிலர் சிந்திக்கத் தூண்டப்படுகிறார்கள். அத்தகைய கலைப் படைப்புகளை நாம் பார்த்திருக்கிறோம். இளைஞர் சேவை மன்றத்தில் அறிவும் அனுபவமும் பெற்ற எமது கலைஞர்கள் இன்றும் கலைத்துறையில் சிறந்து விளங்குவதுடன், வெற்றிகரமான படைப்புகளையும் வெளிக்கொணர்ந்து இரசிகர்களின் அன்பையும் பாராட்டையும் பெற்று வருகின்றனர். இன்றும் நாம் அவற்றை அனுபவிக்கிறோம். அவர்கள் இன்று உதயமாகி நாளை மறையும் நட்சத்திரங்கள் அல்ல, அவர்கள் கலைத் துறையில் பிரகாசித்து எமக்கு ஒளியை வழங்குகிறார்கள். பரிவுணர்வுள்ள அறிவார்ந்த இளைஞர் சமூகத்தை உருவாக்க கலைகள் அவசியம். கலையோடு வளரும் பிள்ளைகள் எதிர்காலத்தில் முழுமையான மனிதர்களாக மாறுகிறார்கள். அவர்கள் இயல்பாகவே ஒருவர் மற்றவருடைய குணங்களை அடையாளம் கண்டுகொள்ளும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக மாறுகிறார்கள்.
இன்று உயர் கலை படைப்பாளிகளின் பற்றாக்குறை உள்ளது என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கிறோம். கடந்த கால கலைஞர்கள் தமது படைப்பாற்றல் மற்றும் திறமையின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்கினர். இதனால் எந்த நிதி சார்ந்த இலாபத்தையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை. பணம் என்பது அடிப்படைத் தேவையாக இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால் பணம் இல்லாமல் இன்று படைப்புகளை செய்ய முடியாது. இன்று, அத்தகைய நீண்ட கால முதலீட்டைச் செய்து படைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை. இன்று பல்வேறு சூழ்நிலைகளால் கலையின் மூலம் வாழ்வது கடினமான சூழ்நிலையாக மாறியுள்ளது. அந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். இவ்வாறான தருணத்தில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் இச்செயல் பாராட்டப்பட வேண்டியதாகும். கிராமிய மட்டத்தில் 91 போட்டிகள் நடத்தப்பட்டு தேசிய மட்டத்தில் மதிப்பீடுகள் செய்யப்படுகின்றனர். ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இளைஞர் சேவை மன்றம் வழங்கும் ஒரு உதவியாகவே நான் பார்க்கிறேன். இந்த இளைஞர் விருது விழாவின் மூலம், அரங்கியல், சினிமா மற்றும் சின்னத்திரையில் தங்கள் கலைத் திறனை வெளிப்படுத்தும் பல சிறந்த கலைஞர்கள் நாட்டில் உருவாகியுள்ளனர். இன்று விருதுகளைப் பெறும் வளர்ந்து வரும் கலைஞர்களும் அதே பாதையில் சென்று கலைத் துறையில் அடுத்த தலைமுறையாக மாறுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் கலை, கலாசாரம், இரசனை, பொழுதுபோக்கு ஆகிய இலக்குகளை அடைவதற்கும், கலாசார ரீதியாக வளம்பெற்றவர்களை உருவாக்குவதற்கும் இந்த முயற்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு