ரஷ்யா எமது நம்பகமான நட்பு நாடு - பிரதமர்

ரஷ்யா சர்வதேச மன்றங்களில் இலங்கையின் இறையாண்மைக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்துவரும் நம்பகமான நட்பு நாடாகும் என பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இலங்கைக்கான புதிய ரஷ்ய தூதுவர் லிவான் எஸ். சாகர்யான் (Levan S. Dzhagaryan) அவர்களுடனான சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பல தசாப்தங்களுக்கு முன்னர் ஒருவெலயில் இரும்புத் தொழிற்சாலையையும் களனியில் டயர் தொழிற்சாலையையும் நிறுவி இலங்கையின் கைத்தொழில்மயமாக்கலுக்கு சோவியத் வழங்கிய ஆதரவை பிரதமர் இதன்போது நினைவு கூர்ந்தார். தற்போது தேசத்திற்கு சேவையாற்றும் நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு லுமும்பா மற்றும் மொஸ்கோ பல்கலைக்கழகங்களில் வழங்கப்பட்ட புலமைப்பரிசில்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார்.

அனைத்து துறைகளிலும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ரஷ்யா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என தூதுவர் பிரதமரிடம் உறுதியளித்தார்.
இலங்கையில் பாரியளவிலான ரஷ்ய முதலீடுகளுக்கான வாய்ப்புகள் குறித்தும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினார்.
பிரதமர் ஊடகப் பிரிவு