தொழிற்கல்வியை கல்வித் துறையில் சமபெறுமதி மிக்க ஒரு பிரிவாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் தேசிய கல்வி முறைமைக்குள் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வியானது சமபெறுமதியும் கௌரவமும் மிக்க ஒரு கல்விப் பாதையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஜெர்மன் அரசாங்கத்தின் BMZ அமைப்பினூடாகக் கிடைத்த உதவிகளின் கீழ் GIZ அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு, சுவிட்சர்லாந்து அபிவிருத்தி மற்றும் ஒத்துழைப்பு முகவர்நிலையத்தின் (SDC) பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “இலங்கையில் தொழிற்பயிற்சி (VTSL) – இரண்டாம் கட்டம்” திட்டத்தின் வெற்றிகரமான நிறைவைக் குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 12ஆம் திகதி, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

இலங்கையின் தொழில்நுட்ப, தொழிற்கல்வி மற்றும் பயிற்சி (TVET) துறையைப் பலப்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

இலங்கையின் தொழிற்கல்வித் துறையை அபிவிருத்தி செய்வதற்காக நீண்டகாலமாக வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்காக ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து அரசாங்கங்களுக்கும், GIZ, BMZ மற்றும் SDC ஆகிய அமைப்புகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

தொழிற்கல்வி என்பது இளைஞர் யுவதியரை வேலைவாய்ப்புகளுக்காகத் தயார்படுத்துவது மட்டுமன்றி, சமமான வாய்ப்புகளை உருவாக்குதல், வாழ்வாதாரங்களைப் பலப்படுத்துதல், சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் இளம் தலைமுறையினர் அர்த்தமுள்ள, பயனுள்ள வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான சூழலை உருவாக்குவதுடனும் தொடர்புபட்டது என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

வேகமாக மாற்றமடைந்து வரும் தொழில்நுட்பத் துறைகளுக்கும், மனிதவளச் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கும் முகங்கொடுக்கக்கூடிய திறமையான, மாற்றங்களுக்கு இயைந்து செல்லத்தக்க, புத்தாக்கத் திறன்கள் கொண்ட மனிதவளப் படையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

TVET துறையின் டிஜிட்டல் மாற்றத்திற்காக இத்திட்டம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அதில் TVET டிஜிட்டல் வழிகாட்டல் வரைபடம், டிஜிட்டல் பாடத்திட்டங்கள், தகவல் முகாமைத்துவ முறைமைகள் மற்றும் தொழிற்பயிற்சி வாய்ப்புகள் பற்றிய தகவல்களை வழங்கும் “GuideMe” செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

60 பயிற்றுவிப்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்ட Master Trainer Development Programme பற்றிக் கவனம் செலுத்திய பிரதமர், கல்வி முறைமையைப் பலப்படுத்துவதற்குப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் மனித மூலதனத்தில் முதலீடு செய்வது அத்தியாவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

தொழிற்கல்வியானது அரசாங்கத்தின் பரந்த கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கட்டாய அங்கமாக அமைய வேண்டும் என்றும், அதன் மூலம் வேலைவாய்ப்பிற்கு மட்டுமன்றி உயர்கல்வி, தொழில்துறை முன்னேற்றம் மற்றும் வாழ்நாள் முழுவதுமான கற்றலுக்கும் வழிகளைத் திறந்துவிட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.

பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் திறனாற்றல் விருத்தியினூடாக வாய்ப்புகளை உருவாக்குவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கம், பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஆகியவற்றுக்கு இடையிலான பங்களிப்பை மேலும் பலப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.

பசுமைத் திறன்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைபேறாண்மையை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், அதன்கீழ் Green Campus திட்டங்கள், Mobile Green Lab மற்றும் சூரிய சக்தித் தொழில்நுட்பவியலாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் என்பன நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்தின் முடிவானது நவீன, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய, டிஜிட்டல் ஆற்றல்களுடன் கூடிய மற்றும் எதிர்காலத்திற்குத் தயாரான TVET முறைமையொன்றைக் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான பணியின் ஆரம்பமாக அமைய வேண்டும் எனக் கூறிய பிரதமர், இலங்கையின் பொருளாதார மாற்றத்தின் முக்கிய தூணான திறன் அபிவிருத்தியைத் தொடர்ச்சியாகப் பேண வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வின்போது “Footprints of Change” வெளியீடு, Virtual TVET Training Kit கையளிப்பு மற்றும் GuideMe App வெளியீடு என்பன இடம்பெற்றன.

அத்துடன் VTSL திட்டம் பற்றிய ஆவணப்படமொன்றும் திரையிடப்பட்டதோடு, அதனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தின் நியமிக்கப்பட்ட தூதுவர் திரு. ஒலிவியர் பிராஸ், ஜெர்மனியின் பதில் தூதுவர் திருமதி சாரா கெர்ஸ்டின் ஹசல்பார்த், மற்றும் GIZ இலங்கைப் பிரதிநிதி திருமதி பாலினா கெம்போஸ் (Paulina Campos) ஆகியோர் உரையாற்றினர்.

தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், திருமதி சாரா கெர்ஸ்டின் ஹசல்பார்த், திரு. ஒலிவியர் பிராஸ், திருமதி பாலினா கெம்போஸ், GIZ மற்றும் VTSL திட்டத்தின் பிரதிநிதிகள், TVET நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், தலைமைப் பயிற்றுவிப்பாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள், திட்டப் பங்காளர்கள் மற்றும் பல முக்கிய விருந்தினர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு