’தித்வா’ சூறாவளியானது, அண்மைய வரலாற்றில் நமது நாடு எதிர்கொண்ட மிகவும் கடுமையான, சவாலான இயற்கை அனர்த்தம் என்றும், இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பமும் தமது சொந்தக் காலில் நிமிர்ந்து நிற்கும் வரை அரசாங்கம் அவர்களைக் கைவிடாது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
’தித்வா’ பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்ட மக்களுக்குக் காணி உறுதிப்பத்திரங்களையும் காசோலைகளையும் வழங்குவதற்காகக் கண்டி நகர மண்டபத்தில் ஒக்டோபர் 15ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
’தித்வா’ பேரிடர் காரணமாகக் கண்டி மாவட்டத்தில் 58,753 குடும்பங்களைச் சேர்ந்த 195,271 பேர் பாதிக்கப்பட்டதுடன், முழுமையாக மீள்குடியேற்றப்பட வேண்டிய குடும்பங்களின் எண்ணிக்கை 7,941 ஆகும். இதற்கமைய, அரசாங்கக் காணிகளில் 1,802 குடும்பங்கள், சொந்தக் காணிகளில் 1,064 குடும்பங்கள், வீடுகளைக் கொள்வனவு செய்வதற்காக 2,300 குடும்பங்கள், காணிகளை வாங்கி வீடுகளைக் கட்டுவதற்காக 757 குடும்பங்கள், தோட்டப் பகுதிகளில் 454 குடும்பங்கள் என மீள்குடியேற்றத்திற்கான மாற்று வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டு, வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 1,535 குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அரசாங்கக் காணிகளின் பற்றாக்குறையாலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) அறிக்கைகள் தாமதமானமையாலும் ஏற்பட்ட தாமதங்களைக் குறைத்து, நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் பிரதேச செயலாளர்கள் ஊடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,
"ஒவ்வொரு குழந்தைக்கும் பாதுகாப்பான வீடும் கல்வியும் கிடைக்கும் வரை அரசாங்கத்தின் மறுசீரமைப்புப் பணி கைவிடப்படாமல் முன்னெடுத்துச் செல்லப்படும். பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் சுமார் 500 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. நாட்டின் கடனை மேலும் அதிகரித்து இந்நிதி ஒதுக்கப்படவில்லை. ஊழலையும் மோசடிகளையும் குறைத்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்பட்டதால் திறைசேரியில் மிச்சப்படுத்த முடிந்த நிதியிலிருந்தே இது ஒதுக்கப்பட்டது. தேசிய பேரிடர் நிவாரண சேவைகள் மையத்தின் மூலம் இந்நிதியைப் பயன்படுத்தி, ஏற்கெனவே பெருமளவிலான நிவாரணங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, வீடுகளைத் துப்புரவு செய்வதற்குத் தகுதிபெற்ற 431,993 குடும்பங்களில் 431,516 குடும்பங்களுக்கு, அதாவது 99.95 சதவீதத்தினருக்குத் தலா 25,000 ரூபா வீதம் வழங்குவதற்கு 10,787 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, அத்தியாவசிய சமையலறை உபகரணங்களைக் கொள்வனவு செய்யத் தகுதிபெற்ற 172,057 குடும்பங்களில் 167,458 குடும்பங்களுக்கு, அதாவது 99.53 சதவீதத்தினருக்குத் தலா 50,000 ரூபா வீதம் வழங்குவதற்கு 8,372 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்பட்டுள்ளது. பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காகத் தகுதிபெற்ற 207,162 மாணவர்களில் 205,200 பேருக்கு, அதாவது 99.85 சதவீதத்தினருக்குத் தலா 15,000 ரூபா வீதம் வழங்குவதற்கு 3,078 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஐக்கிய நாடுகள் சபையும் உள்ளூர் அமைப்புகளும் இணைந்து 6 இலட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நேரடியாகவே நிவாரண உதவிகளை வழங்கியுள்ளன. நிவாரண உதவிகளை வழங்குவதில் சில பிரதேசங்களில் தாமதங்கள் ஏற்பட்டன. நடைமுறையிலிருந்த சட்ட நிலைமைகள், பழைய சுற்றறிக்கைகளால் ஏற்பட்ட தடைகள், உண்மையில் பாதிக்கப்படாத சிலர் பொய்யான அறிக்கைகளை வழங்க முயன்றமை, அரச அதிகாரிகளின் நிர்வாகப் பிரச்சினைகள் என்பனவே அத்தாமதங்களுக்கான காரணங்களாகும். இருப்பினும், எந்தவொரு தடையின் முன்னும் தளராது, உண்மையாகவே பாதிக்கப்பட்ட ஆதரவற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குத் தடையாக இருந்த அனைத்துச் சட்ட மற்றும் நிர்வாகப் பிரச்சினைகளையும் தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
முப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் நேரடிப் பங்களிப்புடன் பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் புதிய வீடுகளைக் கட்டும் வேலைத்திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளது. ’தித்வா’ சூறாவளி தாக்கிய நாள் முதலே இப்பாரிய பணிக்கு நேரடியாகப் பங்களிப்புச் செய்த முப்படையினர், அரச அதிகாரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புகள், தன்னார்வலர்கள், ஒட்டுமொத்தப் பொதுமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான ஜகத் மனுவர்ண, தனுர திஸாநாயக்க, துஷாரி ஜயசிங்க, ஈ.எம். பஸ்நாயக்க ஆகியோரும், மேயர் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், அரச அதிகாரிகள், பேரிடரால் பாதிக்கப்பட்ட பயனாளிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு