உறவுகளைப் பலப்படுத்திய பூட்டான் விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு பிரதமர் மீண்டும் இலங்கை திரும்பினார்

2026 விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit – GCFSS) கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நேற்று (05) மீண்டும் இலங்கை திரும்பினார்.

தனது உத்தியோகபூர்வ விஜயத்தின்போது, பூட்டானுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவும் நட்பையும் ஒத்துழைப்பையும் மேலும் பலப்படுத்தும் வகையில், பிரதமர் ஜிக்மே கேசர் நம்கியேல் வாங்சுக் (Jigme Khesar Namgyel Wangchuck) மன்னரைச் சந்தித்ததுடன், பூட்டான் பிரதமர் தாஷோ சேரிங் தோப்கே (Dasho Tshering Tobgay), கல்வி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் திருமதி யீசாங் தே தாபா (Yeezang De Thapa) ஆகியோருடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) சிரேஷ்ட பிரதிநிதிகள் மற்றும் ஏனைய சர்வதேச பங்காளர்கள் உள்ளிட்ட, பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட இராஜதந்திரிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தினார்.

ஆகஸ்ட் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 05 ஆம் திகதி வரை பூட்டானில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பூட்டானின் ரோயல் பூட்டான் எயர்லைன்ஸ் (Royal Bhutan Airlines) நிறுவனத்தின் KB 200 விமானத்தில் மீண்டும் இலங்கை வந்தடைந்தார்.

பூட்டானுக்கான இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது பிரதமர், திம்புவிலுள்ள தாஷிச்சோட்சோங் விகாரையில் வழிபட்டு ஆசி பெற்றதுடன், அரச புடவை அருங்காட்சியகம், சிம்தோகா சொங் கோட்டை, பாரோவில் அமைந்துள்ள பூட்டான் தேசிய அருங்காட்சியகம் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.

இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு நட்புறவை மேலும் பலப்படுத்தி, கல்வி, கலாச்சாரம், சுற்றாடல், நிலையான அபிவிருத்தி மற்றும் மக்களிடையேயான தொடர்புகள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இவ்விஜயம் முக்கிய சந்தர்ப்பமாக அமைந்தது.

பிரதமர் ஊடகப் பிரிவு