நாம் எதிர்பார்க்கும் மனப்பாங்கு ரீதியாக வளர்ச்சி அடைந்த, நாகரிகமான பிரஜை உருவாவதற்குத் தேவையான அடித்தளம் பாடசாலைக் காலத்தில் பெறும் அனுபவங்களாகும் என்றும், அந்த அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கு மாணவர்களுக்கு இடமளிப்பதற்கே அரசாங்கம் பதின்மூன்று வருட பாடசாலைக் கல்வியை உறுதிப்படுத்தி இருக்கின்றது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2026 மே 15 ஆம் திகதி சவ்சிரிபாய வளாகத்தில் நடைபெற்ற, டவர் ஹோல் திரையரங்கு அறக்கட்டளையினால் 30 ஆவது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட "2024/2025 அகில இலங்கை பாடசாலைகள் நாடகப் போட்டித்தொடரின்" விருது வழங்கும் விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,
பாடசாலை மாணவர்கள் இத்தகைய போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றாலும் பெறாவிட்டாலும், கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளும் அனுபவங்கள் அவர்களது வாழ்க்கைக்கு மட்டுமன்றி, நாட்டிற்குத் தேவையான உயரிய மனப்பாங்கைக் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதிலும் பெரிதும் துணையாக அமைகின்றன. எனினும், தற்காலத்தில் பிள்ளைகளின் பாடசாலைக் கல்வியைத் துரிதமாக முடித்துவிட்டு, அவர்களை அவசர அவசரமாக வளர்ந்தவர்களாக்குவதற்கு முற்படும் போக்கினைப் பெரியவர்கள் மத்தியில் காணக்கூடியதாக இருக்கின்றது. இது நாட்டிற்குத் தேவையான வளர்ச்சி பெற்ற பிரஜைகளை உருவாக்குவதற்குப் பொருத்தமானதொரு சூழல் அல்ல.
’வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் அரசாங்கத்தின் கொள்கைத் திட்டத்தின் மூலம் நாட்டில் பல மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளது. தற்போது நிலவும் பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகள் மனித வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்துள்ளதால், அவற்றைச் சட்டத்தினால் மாத்திரம் தீர்த்துவிட முடியாது. அதற்குச் சமூகத்தில் தெளிவானதொரு மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.
நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்தின் மூலம் மனப்பாங்கு ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வளர்ச்சி அடைந்த மனிதனை உருவாக்குவதற்குக் கலைத்துறையினால் மகத்தான பணியை ஆற்ற முடியும். சமூகத்திற்குத் தேவையான சிறந்த கற்பனைத்திறன், கருணை மற்றும் தலைமைத்துவப் பண்புகளைக் கொண்ட படைப்பாற்றல் மிக்க, முழுமையான நற்பிரஜைகளை உருவாக்கும் நோக்கில் கல்விச் செயன்முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
பாடசாலை வாழ்க்கையில் மேடையில் பல்வேறு படைப்புகளுக்குப் பங்களிப்புச் செய்யும் அனைவரும் தொழில்சார் கலைஞர்களாவதில்லை; ஆயினும் அதன் மூலம் பெறும் அனுபவங்கள் அவர்களைச் சமூகத்தில் படைப்பாற்றல் மிக்க சிறந்த மனிதர்களாக மாற்றுவதற்குப் பெரும் பக்கபலமாக அமையும். ஒரு நல்ல புத்தகத்தை வாசிப்பதன் மூலமோ அல்லது சிறந்த திரைப்படமொன்றைப் பார்ப்பதன் மூலமோ மனித மனம் நல்வழிப்படுத்தப்படுவதுடன், அது புதிய பரிமாணங்களின் ஊடாகச் சிந்திப்பதற்கான சிந்தனைக் கதவுகளைத் திறந்துவிடுகின்றது. அதன் மூலம் புதியதொரு உலகைப் படைப்பதற்குத் தேவையான மனப்பாங்கு ரீதியான வளர்ச்சி ஏற்பட வழிவகுக்கின்றது.
பிள்ளைகளின் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமான இத்தகைய தீர்க்கமான அனுபவங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காகப் பாடுபடும் ஆசிரியர்களும், பெற்றோரும் சமூகத்திற்கு இன்றியமையாததொரு பணியையே ஆற்றி வருகின்றனர். திறமையான, உணர்வுப்பூர்வமான இளம் சமுதாயத்தினர் மூலமாகவே நாட்டிற்குத் தேவையான தலைவர்கள் உருவாகின்றனர்; அதற்கான பின்னணியை அமைத்துக்கொடுக்கும் இவ்வாறான போட்டிகள் மிகவும் முக்கியமானவையாகும், எனப் பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டவர் ஹோல் திரையரங்கு அறக்கட்டளையின் பணிப்பாளர் நாயகம், அமைச்சுகளின் செயலாளர்கள், அரச அதிகாரிகள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு