கியூபாவில் தென்னைச் செய்கைக்கு இலங்கை உதவவுள்ளது

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் கியூபா தூதுவர் Andres Marshelo Gonzales Garrido அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று 2023.12.14 அன்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய சர்வதேச மன்றங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக கியூபாவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். டெங்கு நோயை எதிர்த்துப் போராடுவதற்கு இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் குறித்தும் அவர் குறிப்பிட்டதுடன், மருத்துவத் துறையில் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார். நுளம்பு ஒழிப்பில் கியூபாவின் நிபுணத்துவத்தை இலங்கை சுகாதார அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ள தூதுவர் இணக்கம் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையே விவசாயத் துறையில் புதிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப புத்தாக்கங்களை பரிமாறிக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கை தென்னை ஆராய்ச்சி நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பரிசோதனைகள் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்த தூதுவர், தென்னை மரக்கன்றுகளை தமது நாட்டில் பயிர்ச்செய்கைக்காக பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். விரைவில் கியூபாவிற்கு 200 தென்னங்கன்றுகள் நன்கொடையாக வழங்கப்படும் என்று தூதுவரிடம் பிரதமர் உறுதியளித்தார். இலங்கையின் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கியூபாவின் தென்னை பயிர்ச்செய்கையை அபிவிருத்தி செய்வதற்கு நிபுணத்துவத்தையும் வழங்கும்.

இலங்கையில் உணவு உற்பத்தி, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தூதுவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் கியூபா தூதரகத்தின் முதல் செயலாளர் Maribel Duarte Gonzalez ஆகியோரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு