பண்டைய தாய்லாந்து-இலங்கை பௌத்த உறவுகள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன... - பிரதமர் தினேஷ் குணவர்தன

இம்முறை வெசாக் நோன்மதி தினத்தில் பெருமளவான தாய்லாந்து பௌத்தர்கள் பௌத்த துறவிகளாக நியமிக்கப்படுவதன் மூலம் பல நூற்றாண்டுகள் பழமையான மத உறவுகள் புதிய உச்சத்தை அடையும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தாய்லாந்து தூதுவர் பைட்டூன் மஹாபன்னபோர்ன் (Paitoon Mahapannaporn) அவர்களை 17.05.2024 அன்று கொழும்பு அலரி மாளிகையில் சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது தாய்லாந்து பிரதமர் மற்றும் புதிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

பௌத்த உறவுகளால் பிணைக்கப்பட்ட இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால மற்றும் நட்புறவுகளை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.

புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேம்படுத்த உதவும் என தாய்லாந்து தூதுவர் சுட்டிக்காட்டினார். கடற்றொழில் துறையில் புதிய கூட்டு முயற்சிகளை ஆராய்வதற்காக தாய்லாந்தில் இருந்து உயர்மட்ட முதலீட்டாளர்கள் குழுவொன்று கடந்த வாரம் இலங்கைக்கு வந்ததாகவும், மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிக்க மற்றொரு தாய்லாந்து குழு அடுத்த வாரம் வரவிருப்பதாகவும் அவர் கூறினார். அவர்கள் தெதுரு ஓயா மற்றும் யான் ஓயா நீர்த்தேக்கங்களுக்குச் சென்று மிதக்கும் சோலார் பேனல்களை நிறுவி மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளனர்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க மற்றும் தாய்லாந்து தூதரகத்தின் ஆலோசகர் பிராங்திப் கொங்கிரிதிசுக்சகோர்ன் (Prangtip Kongridhisuksakorn) ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு