சுயாதீனக் குழுக்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் வந்தாலும், எதிர்க்கட்சியின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுயாதீனக் குழுக்களை அமைத்துக் கொண்டு வெவ்வேறு சின்னங்களின் கீழ் வந்தாலும், எதிர்க்கட்சியின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கலபலுவாவ, பொதுஅருவ, அகுரேகொட மற்றும் பொரலுகொட ஆகிய பகுதிகளில் ஏப்ரல் 30 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,

ஆறு மாதங்களில் மூன்றாவது தேர்தலை நாங்கள் எதிர்கொள்கிறோம். வாக்களிக்கத் தயாராகி வருகிறோம். இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே உள்ளன. அரசாங்கத்தின் திட்டத்தை செயற்படுத்த தேவையான முறைமையை உருவாக்கும்போது, கிராமியத் தலைமையையும் கிராமத்திற்கு ஏற்ற கட்டமைப்பையும் வளர்ப்பதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.

நீங்கள் இந்த நாட்டை ஒப்படைத்தபோது நாட்டின் நிலைமையைப் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். இது ஒரு பொருளாதார சரிவைத் தாண்டிய ஒரு நிறுவன சரிவு. ஒரு நாடு முறையாக கொண்டுநடத்தப்படவும் நிர்வகிக்கப்படவும், அதன் பல்வேறு நிறுவனங்களுக்குள் உள்ள முறைமைகள் முறையாகச் செயற்பட வேண்டும். அந்த இடங்களில் பொருத்தமானவர்கள் இருக்க வேண்டும்.

பிரதேச சபை என்பது உங்கள் வாழ்க்கைக்கு மிக நெருக்கமான ஒரு நிறுவனம். உங்கள் அன்றாட நடவடிக்கைகளின் போதுள்ள நிலைமைகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும்.

2024 ஆம் ஆண்டில், நீங்கள் முடிவுக்கு கொண்டுவந்த ஊழல் நிறைந்த மற்றும் வீண் விரயங்கள் நிறைந்த அரசியல் கலாசாரத்தைப் பாதுகாக்க பாரம்பரியக் கட்சிகளால் முன்வர முடியவில்லை, எனவே பலர் சுயாதீனக் குழுக்களாக முன்வந்துள்ளார்கள்.

ஆனால் அதே பழைய முகங்கள். இது பழைய மதுவை புதிய லேபிள்களுடன் புதிய போத்தலில் வைப்பது போன்றது. அவர்கள் இப்போது ஒரு புதிய பெயரையும் சின்னத்தையும் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அந்தக் கட்சிகள் தங்கள் எதிர்காலத்தை இழந்து வருகின்றன, எதிர்க்கட்சிகள் இப்போது இருப்புக்கான சிக்கலை எதிர்கொள்கின்றன. எனவே, எதிர்க்கட்சியில் உள்ள அனைவரும் திசைகாட்டியை தோற்கடிக்க ஒருமித்த உடன்பாட்டிற்கு வர முயற்சிக்கின்றனர்.

அந்த ஊழல் நிறைந்த அரசியல் முகாமை மக்கள் நிராகரித்துவிட்டார்கள் என்பதை எதிர்க்கட்சி இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதனால்தான் பிள்ளையான் போன்றவர்கள் தேசிய நாயகர்களாக மாறிவிட்டனர். எதிர்க்கட்சி இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றால், ஆறாம் திகதி அதற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டியிருக்கும்.

எங்களுக்கு ஒரு எதிர்க்கட்சியும் தேவை, நாம் ஒரு எதிர்க்கட்சியைக் அமைக்க விரும்பினால், அதற்கு ஒரு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும், அப்போது குறைந்தபட்சம் எதிர்க்கட்சி அந்த வழியில் வெற்றி பெற முடியாது என்பதை அது புரிந்துகொள்ளும்.

எந்த சுயாதீனக் குழுக்களை அமைத்துக்கொண்டு வந்தாலும், அவர்களின் நடைமுறைகள், தத்துவம் மற்றும் நடத்தை மாறும் வரை இந்த நாட்டு மக்கள் அவர்களுக்கு வாய்ப்பளிக்க மாட்டார்கள் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

2024 ஆம் ஆண்டில் நீங்கள் எங்களிடம் ஒப்படைத்த பொறுப்பை, உங்களுக்கும் எங்களுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்தை, ஒரு படி மேலே கொண்டு செல்ல எங்களது இந்த சகோதர சகோதரிகள் முன்வந்துள்ளனர்.

சமூகத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் மக்கள் பிரஜைகளாக தலையிடத் தொடங்கியுள்ளனர். குறைபாடுகள் உள்ளன, மாற்ற வேண்டிய பகுதிகள் உள்ளன, ஆனால் இங்கே மிக முக்கியமான விடயம் என்னவென்றால், பெரும்பான்மையினரின் குறிக்கோள் இந்த நாட்டைக் கட்டியெழுப்புவது, இந்த நாட்டை மேம்படுத்துவது.

அந்த நோக்கத்திற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படும் போது நாம் தனிப்பட்ட முறையில் சில பாதகங்களையோ அல்லது தியாகங்களையோ சந்திக்க வேண்டியிருந்தாலும், பொதுவான நோக்கத்திற்காக முன்வர நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பிள்ளைகளைப் பாடசாலைகளில் சேர்க்கும்போது, அரசாங்கப் பணி காரணமாக இடமாற்றம் போன்றவற்றின் போது அல்லது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்புவது போன்ற விசேட சந்தர்ப்பங்களில், பிள்ளையைப் பாடசாலையில் சேர்க்கும் கடிதத்தை வெளியிட அமைச்சருக்கோ அல்லது செயலாளருக்கோ அதிகாரம் இருந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பிள்ளைகளை பிரபலமான பாடசாலைகளுக்கு அனுப்பினர். 45 மாணவர்கள் இருக்க வேண்டிய வகுப்புகளில் ஐம்பது, ஐம்பத்தைந்து, அறுபது மாணவர்களை சேர்த்துள்ளனர்.

அப்படி எங்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்ய முடியுமா? ஒரு வகுப்பறையில் ஐம்பது மாணவர்களுடன் ஒரு ஆசிரியர் எவ்வாறு கற்பிக்க முடியும்? எனவே, வெற்றிடங்களுக்கு அப்பால் பரிந்துரைகளை வழங்குவதற்காக அமைச்சரோ அல்லது செயலாளரோ எந்த சூழ்நிலையிலும் அமைச்சுகு கடிதங்களை எழுதக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

முறைகேடுகளை சரிசெய்து அனைவருக்கும் நீதி கிடைக்க ஒரு அரசாங்கமாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். எந்த முறைமையும் இல்லாததால், சிலர் அங்கு சென்று முறைகேடுகளைச் செய்தனர். சட்டக் கொள்கைகள் செயற்படுத்தப்படாததை அவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

இந்த கட்டமைப்பை ஒரு முறையான ஒழுங்கிற்குள் கொண்டு வந்து, தற்போதுள்ள முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சிறிது காலம் தேவை என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான கௌசல்யா ஆரியரத்ன, அசித நிரோஷன, கடுவெல நகர சபை வேட்பாளர் ரஞ்சன் ஜயலால் உட்பட பெருந்தொகையான வேட்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு