நவீன சமூகம் மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் உணர்வு பாதுகாப்பு, உளநல பராமரிப்பு மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சிறுவர் பராயம் முகம்கொடுக்கும் நவீன சமூக மற்றும் தொழில்நுட்ப சவால்களுக்கு மத்தியில் சிறுவர்களின் உணர்வு பாதுகாப்பு, உளநல பராமரிப்பு மற்றும் தன்னம்பிக்கையை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும், அரசு அதற்கென முன்னுரிமை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் வழிகாட்டலில் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களம் ஏற்பாடு செய்த சிறுவர் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்றைய தினம் (ஒக்டோபர் 01) ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

’திடமான உள்ளங்கள் - வளமான சிறுவர்கள்’ எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கருத்து தெரிவித்தார்:

’டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவின் ஊடாக கல்விக்கு கிடைக்கும் பயன்கள் உட்பட, சைபர் துன்புறுத்தல்கள் மற்றும் தவறான இணையவழி வழிநடத்தல்களினால் சிறுவர்கள் முகம்கொடுக்கும் அழுத்தங்களிலிருந்து அவர்களை பாதுகாப்பதற்கு தேவையான சட்டம் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய சிறுவர்களுக்கு எதிரான உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளை தடுப்பதற்கும், சிறுவர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறைகளை மேம்படுத்துவதற்கும் தேவையான மறுசீரமைப்புகளை நாம் நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

அதேபோல், பொருளாதார சுரண்டல்களிலிருந்து சிறுவர்களை விடுவிப்பதற்காக நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர், இளைஞர் மற்றும் சிறுவர் தொழில் தொடர்பான சட்டமூலத்தின் ஊடாக அவர்களை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தல் குறித்து காணப்படும் அபராதத் தொகையை 10,000 ரூபாவிலிருந்து 100,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதுமாத்திரமன்றி, முன்பள்ளி கல்வியை ஒழுங்குப்படுத்தி ஒரே தேசிய தரத்தின் கீழ் அதனை கொண்டு வருதல், முன்பள்ளி பதிவுகள் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கென ஏற்பாடுகளை தயாரித்தல் மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டாய தொழில் தகுதிகள் மற்றும் பயிற்சிகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

முன்பள்ளி கற்றல்களின் போது எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களை கட்டாயத்தின் அடிப்படையில் எழுதச் செய்வதை விடவும், விளையாட்டுக்கள் ஊடாக சமூக திறன்கள் மற்றும் ஆளுமையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது. அனைத்து சிறார்களுக்கும் மொழி, மதம் அல்லது பிரதேச பேதங்கள் இன்றி பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும். அரசினால் மாத்திரம் இதனை தனியாக மேற்கொள்ள முடியாது. பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முழு வளர்ந்தோர் சமூகமும் இதற்கென ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்’ என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இங்கு கருத்து தெரிவித்த மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ்:

’பெரியவர்கள் என்ற அடிப்படையில் நாம் பிள்ளைகளுக்கு அறிவுரைகளை வழங்குவதைப் போன்று முன்மாதிரியாகவும் இருக்க வேண்டும். அரசு என்ற அடிப்படையில் சிறுவர்களுக்கென தவறவிடப்பட்ட அனைத்து பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு சிறுவர்களை பாதுகாப்பதற்கு நாம் செயற்படுவோம். உங்கள் பிள்ளைகளை பாதுகாத்துக்கொள்ளுமாறு நான் பெற்றோர்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். தமது வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பை இழக்கும் நிலைக்கு சிறுவர்களை உட்படுத்த வேண்டாம். சிறுவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துங்கள். அவர்களுக்கு செவிமடுங்கள், ஆசிரியர்களாக பாடங்களுக்கு அப்பாற் சென்று வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொடுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

தொழில் என்பது செல்வத்தை உழைக்கும் வழி மாத்திரமல்ல, அதுவொரு பொறுப்பு என்பதை உணரும் அளவிற்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுங்கள். அவ்வாறு இடம்பெறும் போது நல்லதொரு நாட்டை எம்மால் கட்டியெழுப்ப முடியும். நாம் ஒருவரையொருவர் நன்றாக உணர்ந்து அவதானத்துடனும், விழிப்புடனும் செயற்பட்டால் மாத்திரமே ஒரு சுழற்சியாக எமது சமூகத்தில் இடம்பெற்று வரும் வன்முறைகள் மற்றும் துன்புறுத்தல்களை நிறுத்த முடியும்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற உறுப்பினர் அருண பனாகொட, ஹோமாகம பிரதேச சபை தலைவர் கசுன் ரத்னாயக்க, சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் தரங்கனீ விக்கிரமசிங்க உள்ளிட்ட அதிகாரிகளும், தூதுவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடக பிரிவு