ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம் பொதுமக்களிடம் கையளிப்பு

அநுராதபுர மாவட்டத்தின், எல்பத்கம, ஒயாமடுவவில் அமைக்கப்பட்ட ஸ்ரீ சோபித நாஹிமிகம வீட்டுத்திட்டம், அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜூலை 12 ஆம் திகதி, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.

இதன் போது,இத் திட்டத்தின் 115 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன. இந்த வீட்டுத்திட்டம் அதி வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் நினைவு அறக்கட்டளையினாள், தற்போதைய இலங்கை அரசாங்கத்தின் தலையீட்டில், இந்திய அரசாங்கங்கத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டது.

நினைவுப்பலகையைத் திறந்து வைத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று வீட்டுப் பயனாளர்களுக்கு அடையாளமாக வீட்டுச் சாவிகளை கையளித்த பிரதமர், விகாரை வளாகத்தில் ஒரு மரக்கன்றையும் நட்டினார். அதை அடுத்து விழாவில் உரையாற்றிய பிரதமர்,

"மறைந்த மதிப்பிற்குரிய மாதுலுவாவே சோபித தேரர் உயிரோடு இருந்த சமயத்தில் தமது வாழ்க்கையில் இந்தக் கிராமத்திற்காக குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்புகளை செய்தார். அன்னாரின் மறைவை அடுத்து இங்குள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தேரரின் நினைவு அறக்கட்டளை, இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு அன்னாரின் மக்கள் சேவையை முன்னெடுப்பதற்காக மேற்கொண்ட முயற்சிகளை நாம் பாராட்டுகிறோம்.

சிறுவயதிலிருந்தே எனக்கு மதிப்பிற்குரிய சோபித தேருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. நான் அவரிடமிருந்தே பௌத்த மதத்தைப் பற்றிக் கற்றுக்கொண்டேன். அநீதிக்கு எதிராக எழுந்து நிற்கவும, நீதிக்காக போராடவும் அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன்.

பௌதீக ரீதியிலும், பொருளாதாரரீதியாகவும் சிறுவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்துவதில் நாம் தற்போது கவனம் செலுத்தி செயற்பட்டு வருகின்றோம். உத்தேச கல்விச் சீர்திருத்தங்களின் மூலம் சிறுவர்களை இந்த நாட்டின் அடுத்த தலைமுறையின் தலைவர்களாக மாறத்தக்க தரமான கல்வியை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்க நாம் உறுதிகொண்டுள்ளோம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஸ்ரீ சோபித விகாரையின் தலைமைத் தேரர், மதிப்பிற்குரிய எல்பத்தகம ரேவத அவர்கள்,

"அந்தக் காலத்தில், வணக்கத்துக்குரிய சோபித தேரர் அவரது விகாரைக்கு கிடைத்த சீனி மற்றும் தேயிலை போன்ற பொருட்களைக் கூட இந்தக் கிராமத்திற்கு பெற்றுக்கொடுத்தே இக்கிராமத்தைப் போசித்தார். அந்த அளவிற்கு அன்னார் ஒரு முன்மாதிரியாக இருந்தார்.

2017 இல் இந்தத் திட்டத்தை ஆரம்பித்த போது, அரசியல்வாதிகள் இந்த கிராமத்திற்கு வந்தனர் ஆயினும் அவர்கள் விரும்பிய படி செயல்பட வாய்ப்பு கிடைக்காததால் அவர்கள் இத்திட்டத்தை கைநழுவி விட்டார்கள். மரங்களை வெட்டவோ, விலங்குகளை கொலை செய்யவோ, மணல் அகலவோ நாம் அவர்களுக்கு இடம் அளிக்காததாலேயே அவர்கள் இத் திட்டத்தைக் கைவிட்டனர்.

2017 இல், இந்த கிராமத்துக்கு ஒரு கால அட்டவணைக்கு அமைய முறையான பஸ் சேவையினை பெற்றுத் தருமாறு கேட்பதற்கு ஒரு குறிப்பிட்ட அமைச்சரைச் சந்திக்க நான் சென்றேன். எனினும் அந்த சந்திப்பின் போது, அவர் என் கடிதத்தை என் முகத்தில் வீசினார். உன்னைய அரசாங்கங்கள் இந்த ஏழை மக்களை அவ்வாறே நடத்தினார்கள்

ஆயினும் 2025 மே மாதத்திற்குள் இந்தத் வீட்டு திட்டத்தை பூர்த்தி செய்து தருமாறு தனிப்பட்டரீதியில் நான் தற்போதைய ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டேன். இன்று அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கின்றார், பிரதமரிடம் பொறுப்பை ஒப்படைத்து முன்னெடுக்கச் செய்தார். வீட்டமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, வீடு வீடாக சென்று மிகுந்த கரிசனையுடன் பணிகளை முன்னெடுத்து. கோரப்பட்ட தேதியில் திட்டத்தை பூர்த்தி செய்து தருவதற்காக சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கினார். தற்போதைய அரசாங்கம் இந்தப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றப் பெரும் ஆதரலை அளித்தது என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். எனக் கூறினார்"

நிகழ்வில் பங்கேற்ற வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க பேசுகையில்,

"இதுபோன்ற நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட கிராமங்களுக்கு மருத்துவமனைகள், குளங்கள் மற்றும் கல்வி வசதிகள் போன்ற அத்தியாவசிய வசதிகளை பெற்றுக் கொடுப்பது கட்டாயத் தேவையாகும்.இவற்றைப் பெற்றுக் கொடுப்பது எமது அரசாங்கத்தின் பொறுப்பாகும், அத்தோடு கூட்டுறவு முறையின் கீழ் கிராம உற்பத்திகளைப் பரந்த சந்தைகளுடன் இணைப்பதற்கான ஒரு நடைமுறை திட்டத்தையும் நாம் வகுத்திருக்கின்றோம்" என அவர் தெரிவித்தார்.

நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, "தேசிய மக்கள் சக்தி யின் கொள்கைகளின் கீழ் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான வீட்டு வசதிகளை வழங்க நாம் செயல்பட்டு வருகின்றோம். இந்த ஆண்டில் புதிய வீடுகளைக் கட்டுவதற்கென நாம் பெரும் தொகைப் பணத்தை முதலீடு செய்துள்ளோம். இந்தக் கிராமத்தைப் பார்வையிட நாம் வந்த போது, மக்களின் துன்பத்தைக் நேரடியாகவே கண்டோம். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டுமென எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது." எனக் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இந்திய உயர்ஸ்தானிகர் திரு. சந்தோஷ் ஜா உரையாற்றுகையில்:

இது இந்தியா, ’நாம் ஒற்றுமையாக உயர்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ் முன்னேறிக்கொண்டிருக்கிற தருணமாகும், இலங்கையும் வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் நாட்டை மறுசீரமைக்கும் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த உதாரணமாகும்

பௌத்த தர்மத்தினால் புடம் போட பட்டமை இரு நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுக்கு காரணமாகும். அத்தோடு பொருளாதாரம் உதவியை பெற்றுக் கொடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மட்டும் இலங்கை அரசுகள் இணைந்து மேற்கொண்ட இந்த செயல்திட்டமானது பௌத்த தர்மத்தில் வருகின்ற கருணை குணத்தை மேலோங்க செய்கின்றது. என தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் தந்திரிமலே ராஜமஹாவிகாரையின் தலைமைத் தேரர் அதி வணக்கத்துக்குரிய தந்திரிமலே சந்திரரத்ன தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும், வீடு அபிவிருத்தி கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிப் பிரதியமைச்சர், டீ.பி. சரத், முன்னாள் சபாநாயகர் திரு. கரு ஜயசூரிய, அநுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சேன நாணயக்கார, மாதுலுவாவே சோபித தேரர் அறக்கட்டளையின் தலைவர் திரு. ரவி ஜயவர்தன, வீட்டுப் பயனாளர்கள், மற்றும் பெரும் எண்ணிக்கையிலான உள்ளூர் குடியிருப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு