பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பூட்டானின் கல்வி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் யீசாங் டி தாபாவுடன் இருதரப்பு சந்திப்பு

2026 ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 4 வரை பூட்டானில் நடைபெற்று வரும் உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் அங்குரார்ப்பண மாநாடு 2026 (Global Conscious Food Systems Summit 2026) நிகழ்வுடன் இணைந்ததாக, இலங்கைப் பிரதமரும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், 2026 செப்டம்பர் 3ஆம் திகதி பூட்டானின் கல்வி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் யீசாங் டி தாபா அவர்களுடன் பயனுள்ள இருதரப்பு சந்திப்பொன்றை மேற்கொண்டார்.

கல்வித் துறையில் இலங்கை–பூட்டான் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான வழிமுறைகள் குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, அரசாங்கங்களுக்கு இடையிலான மேம்படுத்தப்பட்ட ஈடுபாட்டின் மூலம் இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஆகிய துறைகளில் நிறுவன ரீதியான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர். அத்துடன், இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், ஒத்துழைப்புக்கான புதிய வழிமுறைகளை ஆராய்வதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.

கல்வி மற்றும் தொழிற்பயிற்சி துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்து கைச்சாத்திடுவதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இரு தரப்பினரும் இதன்போது இணக்கம் தெரிவித்தனர். மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு, செயலாளர் மட்ட தலைமையிலான கூட்டு செயற்குழுவொன்றை நிறுவுவதன் மூலம் வசதிகளை ஏற்படுத்த முடியும் என்றும் இணக்கம் காணப்பட்டது. இக்குழுவின் கூட்டங்கள் வருடாந்தம் நடத்தப்பட்டு, முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தல், ஒத்துழைப்புக்கான புதிய துறைகளை அடையாளம் காணுதல் மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்துதல் ஆகியவை மேற்கொள்ளப்படும்.

இந்த சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்ட முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கல்வி மற்றும் ஆசிரியர் பரிமாற்றங்களை ஊக்குவித்தல், கூட்டு ஆராய்ச்சிகள் மற்றும் பல்கலைக்கழக நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தல், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி மற்றும் திறன் விருத்தி வாய்ப்புகளை வலுப்படுத்துதல், அத்துடன் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளில் நிபுணத்துவம் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவை அடங்கும்.

மாணவர்களிடையே ஒழுக்க விழுமியங்களை மேம்படுத்துதல், சிறுவர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துதல், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, நலன்பேணல் மற்றும் தரமான கல்விக்கான அணுகலை உறுதிப்படுத்துதல் தொடர்பிலும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

பூட்டான் மாணவர்கள் இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களில் இளமானி கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, பல் மருத்துவம், மருத்துவம் (MBBS) மற்றும் உடலியல் சிகிச்சை மருத்துவம் (Physiotherapy) உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய சுகாதாரத் துறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. மேலும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் மற்றும் சுகாதார துறைகளில் முதுமானி கற்கைகளைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் குறித்தும், இரு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்தச் சந்திப்பு, கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் துறைகளில் இலங்கை மற்றும் பூட்டானுக்கு இடையிலான ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், இரு நாடுகளையும் சேர்ந்த மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பரஸ்பர நலனுக்காக நீண்டகால ஒத்துழைப்புக்கான புதிய வழிமுறைகளை ஆராய்வதற்கும் பெறுமதியானதொரு வாய்ப்பை வழங்கியது.

பிரதமர் ஊடகப் பிரிவ