அனைத்து மனிதர்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கொண்டாடும் இத்தருணத்தில், “எமது உரிமைகள், எமது எதிர்காலம், இதோ இப்போதிருந்து” என்ற 2024 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தின கருப்பொருளுடன் ஒரு தேசமாக நாம் ஒன்றுபட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.
இந்த கருப்பொருள் மனித உரிமைகளின் பாதுகாப்பும் மேம்பாடும் ஒரு சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவதற்கான இலட்சியங்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நிகழ்காலத்திற்கு மிகவும் நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை எமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து பிரஜைகளினதும் உரிமைகளையும் பாதுகாப்பது ஒரு நீதியான சமுதாயத்தின் அடித்தளமாக இருக்கின்ற அதேநேரம், இது அனைவருக்கும் கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரம் செழித்தோங்கும் ஒரு எதிர்காலத்திற்கான அடிப்படையாகும்.
இந்த உலகளாவிய உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அனைவருக்கும் நீதி மற்றும் வாய்ப்புகளை உத்தரவாதம் செய்யும் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கும் எமது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்பதை இந்த சிறப்புவாய்ந்த நாளில் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டால், அனைவரினதும் மனித உரிமைகளை மதிக்கும், பாதுகாக்கும் மற்றும் கொண்டாடும் புதியதோர் உலகை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.
கலாநிதி ஹரிணி அமரசூரிய.
பிரதமர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.
2024 டிசம்பர் 10