நெருங்கிய தொடர்பாடலைப் பேணிப் பிள்ளைகளுக்கும் நமக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது நமது பொறுப்பாகும்
பிள்ளைகளைப் புரிந்துகொள்ள வேண்டுமாயின் அவர்களின் மனநிலையிலிருந்து சிந்திக்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்றும், பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு இரு சாராருக்குமிடையே நல்லதொரு தொடர்பாடலைப் பேணுவது அத்தியாவசியமானது என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கம் உலகச் சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்திருந்த சிறுவர் தின விழா, ஒக்டோபர் 11ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேற்கூறியவாறு குறிப்பிட்டார்.
இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்:
“பிள்ளைகளே நமது உலகம். அவர்களின் எதிர்காலத்தைச் சிறப்பானதாக ஆக்குவதற்காகச் செய்யக்கூடிய அனைத்தையும் செய்ய நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பெற்றோராகவும் பெரியோராகவும் நம் முன்னாலுள்ள மிகப்பெரிய சவால், பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதாகும். தற்காலப் பிள்ளைகள் நம்மை விடத் தொழில்நுட்ப அறிவில் மிகவும் முன்னேறியவர்களாக இருக்கிறார்கள். எனவே, பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே சரியான தொடர்பாடலைப் பேணி அந்த இடைவெளியைக் குறைப்பது, பெரியவர்களாகிய நமது பொறுப்பாகும்” என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமர் அலுவலக நலன்புரிச் சங்கத்தின் தலைவரும் சிரேஷ்ட உதவிச் செயலாளருமான வத்சலா ஆட்டிகல உள்ளிட்ட பிரதமர் அலுவலக அதிகாரிகளும், நலன்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களும், சிறுவர்களும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு