பிரதமர் தலைமையில், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது தொடர்பான கலந்துரையாடல்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விசேட கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், உதவித் தொழில்நுட்ப விரிவாக்கத்திற்குமான மூலோபாயத் திட்டங்களை வகுக்கும் நோக்கில், பிரதமரின் தலைமையில் ஆகஸ்ட் 18ஆம் திகதி உயர்மட்டக் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இதில் டிஜிட்டல் பொருளாதாரப் பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண சீ. தனபால, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ ஆகியோருடன், கல்வி, சுகாதாரம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சுகளின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

முறையற்ற வகையில், திட்டமிடப்படாத நடைமுறைப்படுத்தல் சாதனங்கள் மற்றும் முதலீடுகள் வீணாகச் செல்வதற்கு வழிவகுக்கும் என்பதால், துறை சார்ந்த சவால்களைக் கருத்திற்கொண்டு, இந்த முன்னோடித் திட்டம் ஒவ்வொரு நுணுக்கமான விடயத்திலும் கவனம் செலுத்தித் தெளிவாகத் திட்டமிடப்பட வேண்டும் என இக்கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது.

இதன்படி, பின்வரும் அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டன:

சிறிய அளவிலான முன்னோடித் திட்டத்தைப் பரீட்சித்து, அதிலிருந்து கற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தலை மேம்படுத்துவதற்காகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடசாலைகள் மற்றும் சாதனங்களுடன் இதனை ஆரம்பித்தல்.

ஆரம்பத்தில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களை மையப்படுத்தி, மாற்றுத்திறனாளிப் பிள்ளைகளுக்கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட பாடசாலைகள் அல்லது மறுசீரமைப்பு முன்னெடுப்புகளின் கீழ் அபிவிருத்திக்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு முன்னுரிமையளித்து, தற்போது முன்னெடுக்கப்படும் கல்வி மறுசீரமைப்புடன் இதனை ஒன்றிணைத்தல்.

ஆரம்பத்திலேயே அனைத்துக் கற்றல் குறைபாடுகளையும் கருத்திற்கொள்வதற்குப் பதிலாக, அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளுக்கு மாத்திரம் தீர்வு காண்பதோடு, படிப்படியாக அதனை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்துதல்.

பயனுள்ள நடைமுறைப்படுத்தலுக்கு ஆதரவளிக்கும் வகையில், பரீட்சார்த்த முறைகள், கல்வியியலாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் அணுகல்தன்மைத் தரநிலைகளைப் பலப்படுத்துதல் ஆகிய விடயங்களும் இக்கலந்துரையாடலின்போது கவனத்திற்கொள்ளப்பட்டன.

பிரதமர் ஊடகப் பிரிவு