பிள்ளைகளின் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

ஆசிரியர் தொழில் என்பது வெறும் வேலைவாய்ப்பை வழங்குவது மாத்திரமன்றி, பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்குவதற்கான அடிப்படையுமாகும். ஆகையால், ஆசிரியர் சேவையின் தரத்தைப் பாதுகாத்து, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஒக்டோார் 23, பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட வினாக்களுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

"நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் காணப்படும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்கள் 23,006க்காக, இலங்கை ஆசிரியர் சேவையின் 3-1-(அ) தரத்திற்குப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தேசிய பாடசாலைகளில் 4,484 வெற்றிடங்கள் காணப்படுவதுடன், மேல் மாகாணத்தில் 2,500உம், மத்திய மாகாணத்தில் 3,480உம், தென் மாகாணத்தில் 1,417உம், வட மாகாணத்தில் 1,685உம், கிழக்கு மாகாணத்தில் 2,267உம், வடமேல் மாகாணத்தில் 2,025உம், வடமத்திய மாகாணத்தில் 1,345உம், ஊவா மாகாணத்தில் 1,606உம், சபரகமுவ மாகாணத்தில் 1,997உம் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக, ஒரு விண்ணப்பதாரிக்கு உயர்தரத்தில் இரண்டு பாடங்களுக்கும், சாதாரண தரத்தில் இரண்டு பாடங்களுக்கும், அத்துடன் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகள் ஆகிய பிரிவுகளின் கீழும் விண்ணப்பிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டிருந்தமையாலும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கும் 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கும் கட்டுப்பட்டுச் செயற்பட வேண்டியிருந்தமையாலும் இது சற்றுச் சிக்கலானதொரு நடைமுறையாக மாறியுள்ளது.

அதற்கமைய, பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் ஒரே விண்ணப்பதாரி பல பாடங்களின் கீழ் தகுதி பெற்றுள்ளமையால், இக்கட்டத்தில் மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரிகள் உட்பட நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ள மொத்த விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 17,688 ஆகும்.

மேலும், திறந்த அடிப்படையில் 11,906 பாடச் சேர்க்கைகளும், குறைந்தபட்ச அடிப்படையில் 23,665 பாடச் சேர்க்கைகளும் நேர்முகப் பரீட்சைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

வெற்றிடங்களுக்கு இருமடங்கு எண்ணிக்கையானோர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும் என்பதால், முதலாம் கட்ட ஆட்சேர்ப்புகளின் பின்னர் எஞ்சும் வெற்றிடங்களுக்குப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் இரண்டாம், மூன்றாம் கட்டங்களின் கீழ் அழைப்புகள் விடுக்கப்படும்.

பல வருடங்களாக ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படாததன் காரணமாக, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக அதிபர்களால் 8,788 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வகுப்பறைச் சேவைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்புக்கு அமைவாகப் போட்டிப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும் இன்றி எந்தவொரு உத்தியோகத்தரையும் ஆசிரியர் சேவைக்கு நேரடியாக ஈர்த்துக்கொள்ள முடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.

இருப்பினும், இந்த ஆட்சேர்ப்பு நடைமுறை நிறைவடையும் வரை, பாடசாலைக் கட்டமைப்பில் தற்போது பணியாற்றி வரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்களைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

முன்னுரிமை அளிக்கப்படும் பிள்ளைகளின் கல்வித் தரத்தை உறுதிப்படுத்துதல், தற்போது கஷ்டப் பிரதேசப் பாடசாலைகளில்கூடப் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நியாயத்தை வழங்குதல், புதிதாகப் பட்டம் பெற்று ஆசிரியர் தொழிலுக்கு வர எதிர்பார்த்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்குச் சந்தர்ப்பத்தை அளித்தல் ஆகிய மூன்று தரப்புகள் குறித்தும் கவனம் செலுத்தி, அரசாங்கம் இந்தச் சிக்கலான சூழ்நிலையை நுட்பமாகவும் மேற்பார்வையுடனும் நிர்வகித்து வருகின்றது" எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மேலும் வலியுறுத்தினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு