பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்

அன்டிகுவா மற்றும் பார்புடாவில் நடைபெற்ற பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் உச்சி மாநாட்டுக்கு (CHOGM) சமாந்தரமாக, 2026 நவம்பர் 03ஆம் திகதி ருவாண்டா, ஜமேக்கா, உகண்டா ஆகிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இருதரப்புச் சந்திப்புகளை மேற்கொண்டார்.

ருவாண்டா குடியரசின் ஜனாதிபதி அதிமேதகு போல் ககாமே அவர்களைப் பிரதமர் சந்தித்து உரையாடினார். இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் சுட்டிக்காட்டினர். இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய ஒத்துழைப்பு வழிகளைக் கண்டறிதல், பொருளாதாரத் தொடர்புகளை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியன குறித்தும் அவர்கள் கலந்துரையாடினர்.

அதனைத் தொடர்ந்து, ஜமேக்காவின் பிரதமர் கலாநிதி அண்ட்ரூ ஹோல்னஸ் அவர்களையும் பிரதமர் கலாநிதி அமரசூரிய சந்தித்துப் பேசினார். இலங்கைக்கும் ஜமேக்காவுக்கும் இடையிலான மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துதல், பரஸ்பர ஒத்துழைப்புக்கான வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகிய விடயங்களில் இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இருதரப்பு ஈடுபாட்டை மேலும் கட்டியெழுப்புவதற்கான சாத்தியக்கூறுகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், 2027 ஜனவரியில் நடைபெறவுள்ள Expo Sri Lanka கண்காட்சியில் பங்கேற்குமாறு ஜமேக்காவுக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன், 2028ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய மகளிர் விவகார அமைச்சர்கள் மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு அவர் ஜமேக்காவுக்கு அழைப்பு விடுத்தார்.

மேலும், உகண்டாவின் நீதி மற்றும் அரசியலமைப்பு விவகாரங்கள் அமைச்சரான கௌரவ நோர்பர்ட் மாவோ அவர்களையும் பிரதமர் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளான தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம் ஆகியவற்றில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து இதன்போது ஆராயப்பட்டது. இத்துறைகள் சார்ந்த நிபுணத்துவத்தைப் பகிர்ந்துகொள்ளல், அறிவைப் பரிமாறிக்கொள்ளல், இருதரப்பினருக்கும் பயனுள்ள முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்புகளை இருதரப்பினரும் அங்கீகரித்தனர்.

ஒரு சுருக்கமான சந்திப்பின்போது, மாலைதீவு குடியரசின் உப ஜனாதிபதி மேதகு உஸ். ஹுசைன் முஹம்மது லத்தீப் அவர்களும் பிரதமரும் பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

பொதுநலவாயப் பங்காளிகளுடனான ஈடுபாட்டை வலுப்படுத்துவதற்கும், பொருளாதாரம், கல்வி, விவசாயம், சமூகத் துறைகளில் பரஸ்பர நன்மையளிக்கும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு இச்சந்திப்புகள் சிறந்த வாய்ப்பாக அமைந்தன.

பிரதமர் ஊடகப் பிரிவு