இலங்கையின் கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவு - ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர்

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச் செயலாளரும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளருமான திருமதி கன்னி விக்னராஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (2024.01.04) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

திருமதி விக்னராஜா இலங்கையின் சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்காக எடுக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு பாராட்டு தெரிவித்ததோடு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) கீழ் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார். இலங்கையின் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதில் பிரதமரின் பங்கை அவர் பாராட்டினார். "கடந்த 30 அல்லது 40 ஆண்டுகளாக நாட்டின் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக உங்களின் நிலையான கொள்கையை நாங்கள் பெரிதும் பாராட்டுகிறோம்," என்று அவர் கூறினார்.

கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் மயமாக்கல், அரசாங்கத்துறை நவீனமயமாக்கல், காலநிலை மாற்றம், பசுமைப் பொருளாதாரம், நீர் மற்றும் ஏனைய தொடர்புடைய அபிவிருத்தி பிரச்சினைகள் தொடர்பான இலங்கையின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து இந்த கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.

பொருளாதார மீட்சிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நீண்ட கால உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் வரி அமைப்பை விரிவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அவருக்கு விளக்கினார். கேள்விப்பத்திரம் மற்றும் விலைமனு முறையும் இலத்திரனியல் முறைமையின் கீழ் டிஜிடல்மயப்படுத்தப்படுவதுடன், அது தேசிய விலைமனு நடவடிக்கைகளுக்காக இவ்வருடம் மார்ச் முதல் நடைமுறைக்கு வருகிறது. சர்வதேச விலைமனு நடைமுறை தொடர்பான புதிய முறை செப்டெம்பர் மாதம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு