விழுமியங்களைப் பாதுகாத்து, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மைத் தயார்படுத்தி, அனுபவங்களின் அடிப்படையில் சரியாகச் செயற்படும் தலைவர்களே எதிர்காலத்திற்குத் தேவைப்படுகின்றனர். - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் (DSCSC) 19ஆவது பாடநெறிக்கான பட்டமளிப்பு விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில் 2025 டிசம்பர் 16ஆம் திகதி நெலும் பொகுண அரங்கில் நடைபெற்றது.

முப்படைகளுக்கான உயரிய இராணுவக் கல்வி நிறுவனமான இக்கல்லூரியில், 19ஆவது பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 26 வெளிநாட்டு மாணவர்கள் உட்பட 149 பயிற்சிப் பணியாளர்களுக்கு இதன்போது பட்டங்கள் வழங்கப்பட்டன. இது பிராந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் நட்புறவின் வலிமையைப் பிரதிபலிப்பதாக அமைகின்றது.

கல்விச் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு Golden Owl Award, Golden Pen Award மற்றும் Commandant’s Honours ஆகிய மூன்று சிறப்பு விருதுகளைப் பிரதமர் வழங்கியதுடன், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் சஞ்சிகையின் (Defence and Security Journal) 10ஆவது பதிப்பு மற்றும் ’Owlet’ சஞ்சிகை என்பனவும் உத்தியோகபூர்வமாகப் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.

இந்த விழாவில் உரையாற்றிய பிரதமர்:

’தித்வா’ சூறாவளியினால் ஏற்பட்ட பாரிய பாதிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர், குறிப்பாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களைப் பாராட்டியதுடன், உயிரிழந்த அனைவருக்கும் தனது மரியாதையைச் செலுத்தினார். மேலும், தேசிய நெருக்கடியின் போது முப்படையினர் மக்களுடனும் சிவில் நிறுவனங்களுடனும் இணைந்து, பாரிய அர்ப்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்பட்டமைக்காகப் பாராட்டுத் தெரிவித்தார்.

இந்தக் கற்கையில் வெளிநாட்டுப் பயிற்சிப் பணியாளர்களின் பங்குபற்றல், சர்வதேச அனுபவப் பரிமாற்றம், பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் நட்புறவு ஆகியவற்றை வலுப்படுத்துவதாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

எதிர்காலத் தலைவர்கள் சட்டத்தை மதித்து, ஒழுக்க விழுமியங்களைப் பேணி, மாற்றங்களுக்கு ஏற்பத் தம்மை மாற்றிக்கொண்டு, கற்றல் அனுபவங்களுக்கமையச் செயற்படுவது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய தொழில்நுட்பத்துடன் இராணுவச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மாற்றமடைந்த போதிலும், சரியான தீர்மானத்தை எடுத்தல், ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் என்பன தலைமைத்துவத்தின் அடிப்படை அம்சங்களாக என்றும் நிலைத்திருக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இக்கல்லூரியில் கட்டியெழுப்பப்பட்ட தொழில்சார் தொடர்புகள், எதிர்காலச் சமாதான நடவடிக்கைகள், மனிதாபிமானப் பணிகள், சர்வதேச பயிற்சிகள் மற்றும் பிராந்திய நெருக்கடிகளுக்குப் பதிலளிக்கும் செயற்பாடுகளுக்கு முக்கியமானதாக அமையும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, முப்படைத் தளபதிகள், DSCSC இன் முன்னாள் கட்டளைத் தளபதிகள், தற்போதைய சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரப் பிரதிநிதிகள், ஏனைய கௌரவ விருந்தினர்கள் மற்றும் பட்டதாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு