பெண்களின் தலைமைத்துவம் என்பது இனிமேலும் சமத்துவத்தை அடைவதற்கான ஓர் இலக்கு மாத்திரமல்ல; அதையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாக மாறியுள்ளதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
"பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துதல்: வளமான, மீள்திறன் கொண்ட பொதுநலவாயத்துக்கான முதலீடு" எனும் தொனிப்பொருளின் கீழ், 2026 நவம்பர் 02ஆம் திகதி நடைபெற்ற பொதுநலவாய மகளிர் மன்றத்தின் முதலாவது அமர்வின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்,
"பெண்களின் தலைமைத்துவம் என்பது இனிமேலும் வெறுமனே சமத்துவத்தை அடைவதற்கான இலக்கு மாத்திரமல்ல; அதையும் தாண்டிய, உலகளாவிய நிலைத்திருப்புக்கான அத்தியாவசிய நிபந்தனையாகும்.
புவிசார் அரசியல் ஸ்திரமின்மை, பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகள், தொழில்நுட்பம் மூலம் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்கள் ஆகியன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. உலகளாவிய தெற்கு நாடுகளின் அனுபவங்களின்படி, இவற்றை எதிர்கொள்வதற்குக் கூட்டு அணுகுமுறை அவசியம் என்பது மிகத் தெளிவாகிறது. அத்துடன், பெண்கள் அதிகாரத்தையும் மூலதனத்தையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வதற்குத் தடையாகவுள்ள கட்டமைப்பு முறைமைகளை அகற்றுவதும் அவசியமாகும்.
குறிப்பாக, பாதிப்புக்குள்ளாகக்கூடிய தீவு நாடுகளில் பெண்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்துக் கவனம் செலுத்தும்போது, காலநிலை ரீதியாகவும் பெண்களுக்கு நீதியை நிலைநாட்டுவது மிக முக்கியமானதாகும். அத்துடன், சமூகங்களால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்குக் கடன் சுமையை ஏற்படுத்தாத, நேரடியான காலநிலை நிதி முதலீடுகளை வழங்குவதும் அவசியமாகும்.
பெண்களுக்கான உண்மையான சமத்துவத்தை அடைய முடிவது, அவ்வப்போது மேற்கொள்ளப்படும் கொள்கைத் திருத்தங்களால் அன்று; முழுச் சமூகமும் ஒன்றிணைந்து, பலமான, அசைக்க முடியாத கூட்டணியைக் கட்டியெழுப்புவதன் மூலமே ஆகும். அதற்காக அரசாங்கங்கள், சிவில் சமூகம், தனியார் துறை, ஆண்கள் தரப்பினர் ஆகியோரும் தீவிர பங்காளிகளாக இணைந்துகொள்வது முக்கியமாகும்.
அதற்கமைய, பாலினச் சமத்துவத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கும் பொதுநலவாய நாடுகளுக்கிடையிலான கூட்டுச் செயற்பாட்டை வலுப்படுத்துவதற்கும், 14ஆவது பொதுநலவாய மகளிர் விவகார அமைச்சர்களின் மாநாட்டை இலங்கையில் நடத்துவதற்கு எமது அரசாங்கம் தயாராகவுள்ளது" என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தற்போதுள்ள உறுதிமொழிகளையும் அர்ப்பணிப்புகளையும் அர்த்தபூர்வமான நடவடிக்கைகளாக மாற்றி, ஒவ்வொரு பெண்ணுக்கும் சிறுமிக்கும் சுபீட்சம், சுயாதீனம், மீள்திறன் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்காக ஒன்றிணையுமாறு பிரதமர் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் பிரித்தானிய மகாராணி கமீலா பாக்கர், பொதுநலவாய அமைப்பின் பிரதிப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொதுநலவாயத் தலைவர்கள், மதிப்புமிக்க விருந்தினர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு