இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஜப்பான் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்கு தமது நாடு தொடர்ந்து ஆதரவளிக்கும் எனத் தெரிவித்த ஜப்பான் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் கொமுரா மசாஹிரோ( Komura Masahiro) , குறுகிய காலத்தில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மேலும் முன்னேற்றத்தை அடைந்துகொண்டமைக்காக அரசாங்கத்தைப் பாராட்டினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் வெளிநாட்டு முதலீட்டுக்கு சாதகமான சூழலை மேம்படுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று (10.10.2023) பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலில், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், இந்து சமுத்திர வலய நாடுகளின் சங்கத்தின் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்த சந்தர்ப்பத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக இலங்கை தலைவர்களுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைத்ததாக தெரிவித்தார். இந்து சமுத்திர வலய நாடுகளின் சங்கத்தின் தலைவராக தனது இரண்டு வருட பதவிக் காலத்தில் இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர் உறுதியளித்தார்.

இந்து சமுத்திர கடற் பாதைகளின் மூலோபாய அமைவிடத்தை இலங்கை கொண்டுள்ளது என்றும், சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் கொள்கையை அடைவதில் முக்கிய பங்காளியாக உள்ளதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான கொள்கையுடன் நெருங்கிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

காசா பகுதியில் மோதல்கள் அதிகரித்து வருவது குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்த பிரதமர், கோவிட் தொற்றுநோய் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும், போர் மோதலால் உலகம், குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், இதுபோன்ற மற்றொரு பேரழிவை எதிர்கொள்ள முடியாது என்றும் கூறினார். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையில் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜப்பானிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த பிரதமர், வெளிப்படையான மற்றும் சமநிலையான கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக உறுதியளித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் கொள்கை வகுக்கும் இலங்கையின் முயற்சிகளை பாராட்டிய ஜப்பானிய அமைச்சர் கொமுரா மசாஹிரோ, கூடிய விரைவில் இலங்கை முழுமையான அபிவிருத்திக்கான சரியான பாதையில் பிரவேசிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki, பிரதி அமைச்சரின் செயலாளர் Nanao Eiichi, தென்மேற்கு ஆசிய விவகார பிரிவின் பணிப்பாளர் Tsutsumi Taro மற்றும் பணிப்பாளர் Tokita Yuji ஆகியோர் இந்த தூதுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இராஜாங்க அமைச்சர்களான சிசிர ஜயகொடி, ஜானக வக்கும்புர, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எச். டி. கருணாரத்ன ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு