கொழும்பில் நடைபெற்ற FICAC தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்பு

கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் பெப்ரவரி 02ஆம் திகதி நடைபெற்ற உலகத் தூதர்கள் சம்மேளனத்தின் (FICAC) 2026 தெற்காசியப் பிராந்திய மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டார். இலங்கையிலுள்ள தூதர்கள் சங்கம் (Association of Consuls in Sri Lanka) மற்றும் உலகத் தூதர்கள் சம்மேளனம் (World Federation of Consuls) இணைந்து ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு பெப்ரவரி 01 முதல் 04 வரை நடைபெறவுள்ளது. பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் தெற்காசியாவின் நிலையான வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இராஜதந்திரிகள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் இதில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

சர்வதேச அரங்கில் இலங்கையை ஒரு நம்பகமான மற்றும் நிலையான தேசமாக நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகச் செயற்படும் ஒரு தருணத்தில், இம்மாநாட்டை நடத்தும் நாடாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பது ஒரு விசேட சந்தர்ப்பமாகும், எனக் குறிப்பிட்டார்.

அண்மையில் ஏற்பட்ட ’டிட்வா’ சூறாவளியின் தாக்கத்தை நினைவுகூர்ந்த பிரதமர், காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் இலங்கையின் தயார்நிலை குறித்துக் கவனம் செலுத்தியதுடன், அந்த அனர்த்த நிலைமையை முகாமைத்துவம் செய்வதற்குச் சர்வதேசப் பங்காளிகள் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் பாராட்டினார். இத்தகைய காலநிலை மாற்றங்களை எதிர்கொள்வதில் உலகளாவிய ஒத்துழைப்பு, பொறுப்பு மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அவசியம் என்பதையும் பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

அரச துறையின் வினைத்திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துதல், தேசிய ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மைக்கு மதிப்பளித்தல், சேவைகளை வழங்குவதிலும் பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதிலும் டிஜிட்டல் நிர்வாகத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான வேலைத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இலங்கை அரசாங்கம் தெளிவான கொள்கைக் கட்டமைப்பின் ஊடாகப் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்புடன் உள்ளது. நிதி ஒழுக்கம், நிலையான கடன் முகாமைத்துவம் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றின் ஊடாக வளர்ச்சியை மேம்படுத்தும் சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து நாம் கவனம் செலுத்தியுள்ளோம். அதன் ஊடாக, மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கு ஆதரவளிப்பதற்காக நாம் சமூக நலத்திட்டங்களைப் பலப்படுத்தி வருகின்றோம், எனக் கூறினார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையை ஒரு ஸ்திரமான மற்றும் நம்பகமான சர்வதேசப் பங்காளியாக நிலைநிறுத்துவதுடன், உலக அரங்கில் இலங்கையை ஒரு நிலையான சுற்றுலாத் தலமாக அறிமுகப்படுத்த அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, FICAC தலைவர் Nikolaos K. Margaropoulos, இலங்கைத் தூதர்கள் சங்கத்தின் தலைவர் மஹேன் காரியவசம் மற்றும் இராஜதந்திரப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு