பாடசாலைகளுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வேலைத்திட்டம் 2026ம் ஆண்டில் ஆரம்பமாகும். - பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

13 வருடக் கல்வி அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமையாகும்.

2026ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள புதிய கல்வி முறையின் இலக்குகளில் ஒன்றாகப் பாடசாலைகளுக்கிடையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வரும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமெனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். ஏப்ரல் 20ம் திகதி வன்னி மாவட்டத்தின் இரட்டைபெரியகுளம் நகர மண்டபத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன், எந்தவொரு பிள்ளையும் பாடசாலைக் கல்வியைத் தவறவிடுவதற்கு இடமளிக்காது, பதின்மூன்று வருடக் கல்வியை அனைத்துப் பிள்ளைகளினதும் உரிமையாக உறுதிப்படுத்தி, பரீட்சையைக் கேந்திரமாகக் கொண்ட கல்வி முறையிலிருந்து விடுபட்டு, பரந்த கல்வி முறையொன்றை அறிமுகம் செய்வது எதிர்வரும் காலங்களில் இடம்பெறுமெனப் பிரதமர் கூட்டத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

குறித்த பரந்த கல்விப் பரிணாமத்தை மேற்கொள்ளும் வகையில் பிள்ளைகளின் பாடவிதானப் பரிந்துரை, ஆசிரியர்களின் கற்பித்தல் செயன்முறை, பரீட்சைச் செயன்முறை, பாடசாலைகளில் வகுப்பறை மாதிரி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் மாற்றமடைய வேண்டுமெனவும், குறித்த துறையின் அபிவிருத்திக்கென இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் வரலாற்றில் கல்வித் துறைக்கென ஒதுக்கப்பட்ட பாரியளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கென ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும். கல்வியற் கல்லூரிகளின் வசதிகளை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், பல வருடங்களாக மூடப்பட்டிருக்கும் வவுனியா மாவட்டத்தின் சிங்கள மொழி ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியை விரைவில் புனரமைத்து மீளத் திறப்பதற்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

பிள்ளைகளுக்குச் சமூகத்தில் கட்டியெழுப்புவதற்குத் தேவையான திறன்களை மேம்படுத்தும், ஆளுமையைப் பலப்படுத்தும், இலவசக் கல்வியை உறுதிப்படுத்தும், இலவசக் கல்வியின் குறிக்கோளை உண்மையில் அடையாளப்படுத்தும் கல்வி முறையொன்றைக் கட்டியெழுப்புவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இங்கு உரையாற்றும் போது குறிப்பிட்டார்.

இந்த மக்கள் சந்திப்பில் கூட்டுறவு அபிவிருத்தி பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க, வவுனியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.திலகநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜெகதீஸ்வரன் உட்பட வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வவுனியா கிழக்குப் பிரதேச சபைக்கெனப் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட பிரதேச மக்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு