வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கின்ற பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்கும்.

வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு இலங்கையின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கின்றன என்றும், மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கின்ற பொறுப்புமிக்க முதலீடுகளுக்கு அரசாங்கம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்கும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் உலகளாவிய மன்றம் மற்றும் இலங்கை முதலீட்டுச் சபை (BOI) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை உள்ளடக்கிய முதலீட்டு மாநாட்டில் பங்கேற்று, ஆகஸ்ட் 12ஆம் திகதி கொழும்பில் உரையாற்றும்போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்தார்.

“Forward Faster Now” எனும் தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொள்ள அரசாங்கத்தினால் மாத்திரம் தனியாக இயலாது. அதற்கு அரசு, தனியார் மற்றும் சிவில் சமூகமும் ஒன்றிணைய வேண்டும். இன்றளவில் வளர்ந்துவரும் நாடுகளில் வருடாந்த நிதிப் பற்றாக்குறை 2.5 டிரில்லியன் முதல் 4 டிரில்லியன் டொலர்களாகக் காணப்படுகின்றது. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மட்டும் அப்பற்றாக்குறை 1.5 டிரில்லியன் டொலர்களாகும். அதுமட்டுமன்றி, 2030ஆம் ஆண்டளவில் இப்பிராந்தியத்தில் அளவிடக்கூடிய பேண்தகு அபிவிருத்தி இலக்குகளில் 88 சதவீதத்தை நாம் தவறவிடுவதற்கான பாரிய அபாயமும் காணப்படுகின்றது. ஆகையினால் நாம் இந்நிதிகளை முதலீடு செய்வதை விரைவுபடுத்த வேண்டும்.

சவால்கள் நிறைந்த காலப்பகுதிக்குப் பின்னர், இலங்கை தற்சமயம் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மீண்டெழ ஆரம்பித்திருக்கின்றது. 2025ஆம் ஆண்டில் நமது பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்தது. மொத்த உள்நாட்டு உற்பத்தி 108.8 பில்லியன் டொலர்களாக உயர்ந்ததுடன், தனிநபர் வருமானம் 5,000 டொலர்களைத் தாண்டியது. அந்த வகையில் நமது இலக்கு வெறுமனே எண்களில் மட்டும் தென்படும் வளர்ச்சியன்று; நல்ல வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்ற, அனைவருக்கும் நியாயமாகப் பலன்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்ற உண்மையான பொருளாதார மாற்றமாகும்.

வர்த்தகத் துறையின் வளர்ச்சிக்காக அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உச்சக்கட்ட ஒத்துழைப்பை வழங்குவோம். எனினும், நாம் எதிர்பார்ப்பது இலாபத்தை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்ட முதலீடுகளை அல்ல, அவை மனித உரிமைகளையும் சுற்றாடலையும் பாதுகாக்கும் பொறுப்புமிக்க முதலீடுகளாக இருத்தல் வேண்டும். ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தை வழங்குதல், தொழிற்பயிற்சியளித்தல், உரிய விதத்தில் வரிகளைச் செலுத்துதல் போன்றே சுற்றாடலைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதும் ஒவ்வொரு வர்த்தகத்தினதும் முதன்மைப் பொறுப்பாக இருத்தல் வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கும் இதுவரை சமூகத்தில் ஒதுக்கப்பட்டிருந்தவர்களுக்கும் பொருளாதாரத்தில் இணைந்துகொள்வதற்கு இருந்துவரும் தடைகளை அகற்றுவது எமது மிக முக்கியமான முன்னுரிமையாகும்.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை அசம்பாவிதங்களால் ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் விவசாயம் மற்றும் சக்திவளப் பாதுகாப்பிற்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட ’நிலையான நிதி வழிவரைபடம்’ மற்றும் ’பசுமைப் பத்திரக் கட்டமைப்பு’ ஆகியவற்றின் ஊடாக இக்காலநிலைச் சவால்களுக்கு முகங்கொடுக்கவும், உள்நாட்டுச் சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களுக்கு நிதி வசதிகளை வழங்கவும் நாம் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இலங்கை என்பது சுற்றாடலை மதிக்கும், நியாயமான வளர்ச்சியைப் போற்றும் ஒரு நாடாகும். எனவே, வெளிப்படைத்தன்மையுடனான நீண்டகால முதலீடுகளுக்கு எமது கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும் எனப் பிரதமர் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய நாடுகளின் உதவிப் பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் உலகளாவிய உடன்படிக்கையின் முதன்மை நிறைவேற்று அதிகாரியுமான செல்வி சாண்டா ஓஜியாம்போ,

உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் தனியார் ஆகிய இரு துறைகளையுமே பாதிக்கும் மூன்று பாரிய நெருக்கடிகள் காணப்படுவதாக ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அவை காலநிலை நெருக்கடி, சக்திவள நெருக்கடி மற்றும் நிதி வசதி தொடர்பான நெருக்கடி என்பனவாகும். இங்கு பணம் இல்லாமை என்பது உலகில் மூலதனம் இல்லாமை அல்ல. இருக்கின்ற பணத்தை சரியாகப் பயன்படுத்தப்படாமையே ஆகும். தற்போது நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்துகொள்வதற்கு 4 டிரில்லியன் டொலர் பற்றாக்குறை நிலவியபோதிலும், தனியார் துறையிடம் 22 டிரில்லியன் டொலர்கள் இருக்கின்றன. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் அதேவேளை, நல்ல பலன்களைப் பெறக்கூடிய இடங்களுக்கு இம்மூலதனத்தைத் திருப்புவதே தற்போதுள்ள பிரதான சவாலாகும்.

கோவிட், போர், காலநிலைச் சிக்கல்கள் மற்றும் அதிக செலவினங்களுக்கு மத்தியிலும் இதற்கான தீர்வுகள் நம்மிடம் இருக்கின்றன. மக்களுக்குத் தேவையான நிரந்தர வீடுகள், நியாயமான ஊதியம், சமத்துவம் மற்றும் சிறுவர்களுக்குச் சிறந்த கல்வியை வழங்குவது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று, தூய்மையான சக்திவளத்தில் முதலீடு செய்வதன் மூலம் விரைவான பலன்களைப் பெறக்கூடியதாக இருக்கும். புதைபடிவ எரிபொருட்களுக்கு அதிக நிவாரணம் கிடைப்பதால் முதலீடுகளைச் சரியான திசையில் திருப்புவதும் அத்தியாவசியமாகின்றது.

வளர்ந்துவரும் நாடுகளுக்கு முதலீடுகளைக் கொண்டுவருவது என்பது நிதி சார்ந்த விவகாரம் மட்டுமல்ல; அதற்கு நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் அரசு-தனியார் துறைகளுக்கிடையிலான நல்ல ஒத்துழைப்பு இருத்தல் வேண்டும். ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வர்த்தகர்கள், வங்கிகள், முதலீட்டாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒன்றிணைய வேண்டும். இதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அமைப்பும் தொடர்ச்சியாக உதவத் தயாராகவுள்ளன.

UN Global Compact ஊடாக 2030ஆம் ஆண்டளவில் 10 டிரில்லியன் டொலர் நிதிச் சந்தையை உருவாக்குவதற்காகவே CFO கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று, அரசாங்கம், அபிவிருத்தி நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஒன்றிணைந்து வெற்றிகரமான, சமூகத்திற்குப் பயனுள்ள முதலீடுகளை உருவாக்க ’கலப்பு நிதி’ (Blended Finance) முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. வளர்ந்துவரும் பொருளாதாரத்தினுள் காணப்படுகின்ற பாரிய முதலீட்டு வாய்ப்புகளிலிருந்து பயன்பெறுவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைக் கண்டறிய இக்கலந்துரையாடல் ஒரு நல்ல தளத்தை அமைத்துக்கொடுக்கும் என உதவிப் பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, ஐக்கிய நாடுகள் உலகளாவிய உடன்படிக்கையின் பிரதிநிதிகள், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் தனியார் துறை சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரிகள், இராஜதந்திரிகள், நிலையான அபிவிருத்தி பற்றிய நிபுணர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு