வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் சில விமர்சனங்களை அவதானிக்கும் போது மக்கள் எதிர்பார்த்த முறைமை மாற்றம் (System Change) இடம்பெற்று வருவதாக தாம் உறுதியாக நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு இன்று (20) உரையாற்றும் போதே பிரதமர் இதனை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
எமது அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெற்ற இந்த ஒரு மாத காலமாக பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இது பற்றி நாம் விவாதம் செய்து உரையாடல்களில் ஈடுபட்டோம். இதன் போது பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் மற்றும் தொழிற்சங்கங்களை சந்தித்து வரவு செலவு திட்டம் தொடர்பில் கலந்துரையாடினோம்.
எமக்கு முன்வைக்கப்பட்ட அந்த முன்மொழிவுகளின் விமர்சனத்தின் ஊடாக வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்த முடிந்துள்ளது.
என்றாலும், வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முதல் நாள், எதிர்க்கட்சிகளின் பேச்சுக்களிலும், இன்று நடைபெற்ற உரைகளிலும் முன்னேற்றம் உள்ளதா என நான் ஆராய்ந்து பார்த்தேன். ஏனென்றால் ஒரு மாத உரையாடலில் இருந்து சில வளர்ச்சியையும் மாற்றத்தையும் நாம் எதிர்பார்க்கிறோம்.
ஆனால், எதிர்க்கட்சிகளின் சில பேச்சுக்களின் உள்ளடக்கத்தைப் பார்க்கின்றபோது, அவை இன்னும் அப்படியே இருப்பதாகவே உணர்ந்தேன்.
இந்த விவாதத்தில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒரு வகையான தாழ்வுச் சிக்கலால் ஏற்பட்ட வலியால் ஏற்பட்டதாக உணர்ந்தேன். இவை வரவு செலவுத்திட்டத்தின் மூலம் தீர்க்க முடியாத பிரச்சினைகள். வரவு-செலவுத் திட்ட உரையாடல் குறித்து கவனம் செலுத்தும் போது, அரசாங்கம் சாதிக்க முயலும் முறைமை மாற்றம் நிச்சயம் நிகழும் என்று நம்பிக்கையுடன் கூறலாம்.
ஒரு முறைமையை மாற்றினால், அது ஒரே இடத்தில் நடக்கின்ற ஒன்றல்ல. சமூகத்தில் உள்ள அதிகார உறவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. ஒரு அமைப்பு மாற்றத்தில், ஒரு இடத்தில் உள்ள உறவுகள் மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுகின்றன. இந்த வரவுசெலவுத்திட்டத்தை விமர்சிக்கின்ற அல்லது, இந்த முறை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்று பார்த்தால், முறை மாற்றம் ஏற்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
வரவு செலவுத் திட்டம் மீதான பெரும்பாலான விமர்சனங்கள் பழைய முறைமையில் அதிகாரத்தை வைத்திருந்தவர்கள் மற்றும் அந்த அதிகாரத்தை ஒரு சிறப்புரிமையாக பயன்படுத்தியவர்களிடம் இருந்து தான் வருகிறது. சிறப்புரிமையின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு சமூகம் ஜனநாயகமானது அல்ல. அதை மாற்றவே நாம் முயற்சிக்கிறோம். அதிகாரத்தை தவறாக அனுபவித்துவந்த சமூகத்தை பெரும்பான்மையானவர்கள் நிராகரிக்கிறார்கள்.
இந்த வரவுசெலவுத்திட்ட விவாதத்தால் மகிழ்ச்சியடைந்தவர்கள் கடினமாக உழைத்து, மிகவும் நியாயமான முதலீடுகளைச் செய்து, பொறுப்புடன் நடந்துகொள்ளும் வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகும். இன்று அவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்ற அரசியல்வாதிகளின் பின்னால் ஓட வேண்டிய அவசியமில்லை. இன்று அவர்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிகிறது. அவர்களால் பல வருடங்களை திட்டமிட்டு செயற்பட முடிகிறது.
அரச சேவையில் உள்ளவர்கள் தமக்கு ஒரு இடம் கிடைத்துள்ளதால் இந்த மாற்றத்தை பாராட்டுகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கையும் மதிப்பும் கிடைத்துள்ளது. தங்கள் கடமையை சுதந்திரமாகச் செய்ய முடியும் என்ற மகிழ்ச்சி அடைபவர்களும் உள்ளனர்.
சமூகத்தில் வாய்ப்புகளை இழந்த பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், பெருந்தோட்ட மக்கள் உட்பட பலர் இன்று நிவாரணம் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரின் எதிர்காலப் பொருளாதார வழிகள் திறக்கப்படுவதை அவர்களால் பார்க்க முடிகிறது. பொருளாதார நன்மைகளை இழந்த பெருமளவிலான மக்களுக்கு இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழி கிடைத்துள்ளது.
வேலையற்ற இளைஞர்கள் குறித்து பல விவாதங்கள் நடந்தன, வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. ஆனால், தகுதிக்குப் பொருந்தாத வேலைகளை வழங்குவதற்குப் பதிலாக, எதிர்கால முன்னேற்றத்திற்கான வழிகளைத் திறக்கும் முறைமையை நாம் உருவாக்கி வருகிறோம் என்பதே யதார்த்தமாகும். தற்போதும் பல வேலை வாய்ப்புகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆட்சியில் இருந்த அரசுகள் எடுத்த முடிவுகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இந்த நடவடிக்கைகள் தாமதமாகி வருகின்றன. மேலும் சில வழக்குகள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளன.
மக்களின் எரியும் பிரச்சினைகளைப் பயன்படுத்தி தமது அதிகாரத்தையும் சலுகைகளையும் பெற்றவர்கள் இந்த வரவு செலவுத் திட்டம் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
அனைவரையும் உள்ளடக்கிய வகையில் முடிவெடுக்கும் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பெரும் தியாகங்களையும் கடின உழைப்பையும் செய்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இங்கு தெரிவித்தார்.
பிரதமர் ஊடகப் பிரிவு