ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதன்போது பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் தேவையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கண்டி, பல்லேகல SIBA வளாகத்தில் ஜூன் 19 ஆம் திகதி நடைபெற்ற "சசுனட திரிதென சுரகீமு பிரிவென" சாசனத்திற்கு வலுசேர்க்கும், பிரிவெனாவைப் பாதுகாப்போம்) சங்கரஜ புகழஞ்சலி 2026 தேசிய பிரிவெனா தின அரச விழாவில் உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவின் பணிப்பாளர் வணக்கத்திற்குரிய மாதோவிட்ட வஜிரபுத்தி தேரரின் ஆலோசனைகளுக்கு அமைய, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவு மற்றும் மத்திய மாகாண சபை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த தேசிய பிரிவெனா தின அரச விழாவில், பிரிவெனா கல்விக்காகத் தமது சாசனப் பணிகளை அர்ப்பணித்த மகா சங்கத்தினர் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்,
ஒட்டுமொத்த சமூக மாற்றத்தினால் ஏற்படும் சவால்களுக்கு மத்தியில் புத்தசாசனத்தின் எழுச்சிக்காகப் பிரிவெனா கல்வியைப் பலப்படுத்த வேண்டும். இதில் பிரிவெனாக்களும் பாடசாலைகளும் ஒன்றல்ல என்பதை உணர்ந்து, பிரிவெனா கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பாக, நவீன சிக்கலான உலகின் சவால்களை வெல்லக்கூடிய வகையில் மகா சங்கத்தினரை உருவாக்கும் பிரிவெனா கல்வி முறைமைக்காக மகா சங்கத்தினர் முன்னிலை வகிக்க வேண்டும். பிரிவெனா கல்வியின் நோக்கங்களைச் சென்றடையும் வகையில், அந்த மாற்றங்களை நீங்களே ஒன்றிணைந்து வடிவமைத்துக் கொடுக்க வேண்டும், என பிரதமர் கேட்டுக்கொண்டார்.
பிரிவெனா கல்வியை மேம்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் பிரிவெனா கல்விப் பிரிவுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் அனுநாயக்க தேரர்கள், இலங்கை அமரபுர மகா நிக்காய மற்றும் ஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் தேரர்கள், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், தியவதன நிலமே நிலங்க தேல, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ , மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரிவெனா ஆசிரியர்கள், கல்வி கற்கும் துறவிகள் மற்றும் மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு