இலங்கையில் நடைபெறும் பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான முதலாவது மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களும் பிரதிநிதிகள் குழுவினரும் 2026 நவம்பர் 11ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தனர்.
பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் சபையின் தலைமைத்துவம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் அதன் பெறுபேறுகள் தொடர்பில் பிரதிநிதிகள் குழுவினர் தமது கருத்துக்களை முன்வைத்தனர். அத்துடன், சுகாதாரத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய துறைகள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
நிபுணத்துவ அறிவைப் பரிமாறிக்கொள்வதன் மூலமும் திறன் விருத்தியின் ஊடாகவும் பொது சுகாதாரத் துறையில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.
சுகாதாரத் துறையில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு கூட்டு அணுகுமுறையொன்றின் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், முன்னேற்றத்தை அடைவதற்கு ஒவ்வொரு நாடும் தனித்தனியாகச் செயற்படுவதை விடுத்து, பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் அனைத்தினதும் பொதுவான அர்ப்பணிப்பும் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியும் அத்தியாவசியமானவை என்பதைச் சுட்டிக்காட்டினார்.
இந்தச் சந்திப்பில் பங்களாதேஷின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்பேணல் அமைச்சர் சர்தார் எம்.டி. சகாவத் ஹுசைன் (Sardar Md. Sakhawat Husain), மியன்மாரின் சுகாதார அமைச்சர் சோ வின் (Soe Win), நேபாளத்தின் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நீஷா மேத்தா (Neesha Mehta), தாய்லாந்தின் பொது சுகாதாரச் செயலாளரும் பிரதிநிதியுமான ஆர்தித் மீதொங் (Arthit Meethong), பூட்டானின் சுகாதாரச் செயலாளர் பெம்பா வாங்சுக் (Pemba Wangchuk), பிம்ஸ்டெக் பொதுச் செயலாளர் இந்திர மணி பாண்டே (Indra Mani Pandey), பிரதி சுகாதார அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி, சுகாதாரம் மற்றும் ஊடகத் துறை அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க ஆகியோரும், பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு