சட்டவிரோதமாக சொத்துக்கள் சேர்த்த அனைவருக்கும் எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் - பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க
ஒவ்வொரு அமைச்சுக்கும் வரவுசெலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மக்களின் நலனுக்காக திட்டமிட்ட முறையில் செலவிடும் சவாலை ஜனாதிபதி அனைத்து அமைச்சர்களுக்கும் ஒப்படைத்துள்ளதாகவும், கடந்த கால பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகள் ஊழல் அரசியலின் பாலர் பாடசாலைகளாக இருந்தன என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கோட்டேயில் உள்ள ரெபல் ஹோட்டலில் ஏப்ரல் 22 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
பிரதமர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:
"பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள எமது 159 பேரும் குடும்ப அதிகாரத்தினாலோ அல்லது பண பலத்தினாலோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அவர்களும் உங்களைப் போன்ற சாதாரண மக்கள். உங்களிடையே வாழும் மக்கள். அவர்கள் முன்பு போல பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு சண்டையிடுவதில்லை." பாடசாலை பிள்ளைகள் பாராளுமன்றத்தைப் பார்க்க வரும்போது, பிள்ளைகளை அப்புறப்படுத்துமாறு சபாநாயகரிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எமது அரசாங்க உறுப்பினர்கள் மிகவும் கண்ணியத்துடனும், சட்டத்தை மதிக்கும் தன்மையுடனும், அரசியல் முதிர்ச்சியுடனும் நடந்து கொள்கிறார்கள்.
இந்த மாதிரியான பாராளுமன்றத்தைத்தான் நாங்கள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் இன்று அந்த மாற்றத்தைச் செய்துள்ளீர்கள். நன்கு செயற்படும், திறமையான உள்ளூராட்சி மன்றத்தின் பலன்களை நாங்கள் நீண்ட காலமாக உணரவில்லை. அதேபோல், உங்களுக்கு நெருக்கமான இந்த உள்ளூராட்சி நிறுவனத்தை மாற்ற, உங்களுக்கு சேவை செய்யும் ஒரு குழுவை தெரிவுசெய்யுங்கள். இப்போது அதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. " என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க,
"யாராவது நகர சபைக்குச் சென்று சிறிய சம்பளம் பெற்று, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் ஒரு பெரிய வீட்டைக் கட்டி, ஒரு வாகனத்தை வாங்கினால், அவர்கள் அதை எப்படிச் செய்தார்கள் என்று நாங்கள் அவர்களிடம் கேட்போம். அவர்களிடம் அதற்கு பதில் இல்லையென்றால், நாங்கள் சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். அந்த சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்போம்."
எதிர்க்கட்சியினர் எப்போதும் எங்களை விமர்சித்து, குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. நாங்கள் மக்களின் பணத்தை திருடவில்லை,பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்க்கக் கோரி கடிதங்கள் அனுப்பவில்லை, பொலீசாருக்கு எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை. இவ்வளவு நல்ல அரசியல் கலாசாரத்தை செயற்படுத்துவதன் மூலம் நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்.
"உங்கள் கிராமத்தை கட்டியெழுப்ப ஊழல் செய்யாத, உங்கள் பணத்தை திருடாத ஒரு குழுவை நியமிக்குமாறு நான் இச்சந்தரப்பத்தில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்."
இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபை வேட்பாளர் அரோஷ் அத்தபத்து உட்பட பல வேட்பாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு