அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாகியுள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் சமூக குடிநீர் திட்டங்களை விரைவாக நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மார்ச் 21ஆம் திகதி தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக நீர் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், நீர் இணைப்புகளை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட விசேட மென்பொருள் பிரதமரினால் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன், உலக நீர் தினத்தையொட்டி நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பாடசாலைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பணிக்குழாம் தொழில்வான்மையாளர்களுக்கு விருதுகள் மற்றும் பதக்கங்களும் பிரதமரினால் வழங்கிவைக்கப்பட்டது.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய,
நீர் வழங்கல் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து, 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தில் 41,234 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பாரிய அளவிலான நீர் திட்டங்கள் மற்றும் சமூக நீர் திட்டங்களை விரைவாக நிறைவுசெய்தல், பாதுகாப்பான நீர் விநியோகத்தை உறுதிசெய்யும் வகையில் தேசிய முக்கியத்துவத்தை அறிந்து, கம்பஹா - அத்தனகல்ல மற்றும் மினுவாங்கொட இணைந்த நீர் வழங்கல் திட்டம், பொல்கஹவெல - அலவ்வ மற்றும் பொத்துஹெர இணைந்த நீர் வழங்கல் திட்டம், மத்துகம மற்றும் அகலவத்தை ஒருங்கிணைந்த நீர் வழங்கல் திட்டம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சம்பந்தப்பட்ட கடன் வழங்குனர்கள் கடன் வசதிகளை இடைநிறுத்தியதால் தாமதமடைந்த தம்புத்தேகம நீர்வழங்கல் திட்டம் என்பனவற்றை துரிதமாக நிறைவு செய்வதற்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே எமது அரசாங்கத்தின் கொள்கையான "வளமான நாடு அழகான வாழ்க்கை" என்ற தொலைநோக்கினை நடைமுறைப்படுத்த இலங்கையின் ஒரு முன்னோடி நிறுவனம் என்ற வகையில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலிமையுடனும் தைரியத்துடனும் செயற்படும் என்று தான் நம்புவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, வீடமைப்பு பிரதி அமைச்சர் டி. பி. சரத், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் தீப்தி யு. சுமணசேகர உட்பட அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு