மேற்கு மாகாணக் கழிவு முகாமைத்துவக் குழுக் கூட்டம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று (04) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது, அனர்த்த நிலைமை காரணமாகக் குவிந்துள்ள குப்பைகளை முறையான வேலைத்திட்டத்தின் கீழ் அகற்றி, சுத்தம் செய்யும் பணிகளை மூன்று வாரங்களுக்குள் நிறைவு செய்ய வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், குவிந்துள்ள குப்பைகளை விரைவாக அகற்றுவதற்காக, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான கெரவலப்பிட்டியவில் உள்ள ஐந்து ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது. ஆகையினால், தற்போது குவிந்துள்ள குப்பைகளை எவ்விதப் பிரச்சினையும் இன்றி அகற்ற முடியும் எனக் குழு தீர்மானித்தது. அந்தக் காணியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்தன.
இந்தக் கூட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சர் எரங்க குணசேகர, மேற்கு மாகாண ஆளுநர் ஹனீஃப் யூசுப், பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான லக்ஷ்மன் நிபுணஆராச்சி, கொழும்பு மாநகர முதல்வர் விராய் கெலி பல்தசார், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக்க குமார, மேலதிக மாவட்டச் செயலாளர் கௌசல்யா குமாரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோரும், காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளும், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும், மின்சார சபையின் மேலதிகப் பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு