பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில் ஆரம்பமானது

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பொரளஸ்கமுவ நகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயம், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரையில் ஜூன் 29 ஆம் திகதி மிக விமரிசையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு வருகை தந்த பிரதமரை, விகாராதிபதி அதிவணக்கத்திற்குரிய பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் வரவேற்றார். தேரருடன் சுமூகமாகக் கலந்துரையாடிய பிரதமர், விகாரையின் போதி மலுவவிற்குச் சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட “அநுபுது வந்தனா” பொசன் வலயத்தை உத்தியோகபூர்வமாகத் ஆரம்பித்து வைத்த பிரதமர், தர்ம பாடசாலை மாணவர்களினால் பாடப்பட்ட பக்திப் பாடல்கள் நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாராய்ச்சி, பொரளஸ்கமுவ நகர சபைத் தலைவர் நிஷாந்த வெதமுல்ல உள்ளிட்ட முக்கிய அதிதிகள், பிரதேசவாசிகள் மற்றும் பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு