கல்வி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு குறித்து அவுஸ்திரேலியாவின் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருடன் பிரதமர் கலந்துரையாடல்

அவுஸ்திரேலிய குடியுரிமை, நெறிமுறைகள் மற்றும் பல் கலாசார விவகாரங்களுக்கான உதவி அமைச்சரும் சர்வதேச கல்விக்கான உதவி அமைச்சருமான திரு. ஜூலியன் ஹில் அவர்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும் இடையேயான சந்திப்பொன்று 2025 டிசம்பர் 10 ஆம் திகதி கல்வி அமைச்சில் இடம்பெற்றது.

அண்மையில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அனர்த்த நிலைமைகளைத் தொடர்ந்து, மனிதாபிமான உதவி மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க அவுஸ்திரேலிய அரசு நன்கொடையாக வழங்கிய 3.5 மில்லியன் டொலர் நிதி பங்களிப்புக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார். தற்போது காணாமல் போனவர்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்துள்ளதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் புனரமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன் நாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருதற்கான கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

கல்வித் துறை, இருதரப்பு உறவுகள், அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள், சுற்றுலா, முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது. கல்விக்கான உதவி வழங்குதல், உயர்கல்வித் துறையை விரிவுபடுத்தல் மற்றும் அவுஸ்திரேலிய அரசு வழங்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் உள்ளிட்ட கல்வித் துறையில் அவுஸ்திரேலிய அரசாங்கம் நீண்டகாலமாக வழங்கி வரும் ஒத்துழைப்புகளை பிரதமர் பாராட்டினார்.

இலங்கையின் நீண்டகால மூலோபாய பங்காளியாக நாட்டின் கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய பிரதிநிதிகள் குழு வலியுறுத்தியது. அதன்படி, இலங்கையின் கல்வி முன்னுரிமைகள் மற்றும் விரிவான அபிவிருத்தி இலக்குகளை முன்கொண்டுசெல்வதில் நம்பகமான பங்காளியாக தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய மேத்யூ டக்வர்த் (Matthew Duckworth), முதல் உதவிச் செயலாளர் கரேன் ஆன் சாண்டர்காக் (Karen Ann Sandercock), பணிக்குழாம் பிரதானி கேமரூன் ஜெஃப்ரி கிரீன் (Cameron Geoffrey Green) , கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் துணை உயர் ஸ்தானிகர் ரூத் பெயர்ட் (Ruth Baird) மற்றும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கல்வ, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ, உயர்கல்விப் பிரிவின் மேலதிக செயலாளர் (அபிவிருத்தி) அப்சரா கல்தேரா மற்றும் கல்வி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு