விவசாயிகள் கோரிய உரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது நாட்டை உணவில் தன்னிறைவு அடையச்செய்ய பங்களியுங்கள்

விவசாயிகளின் கோரிக்கைகளை செவிமடுத்து விவசாயத்திற்கு தேவையான உரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், நாட்டை விவசாயத்தில் தன்னிறைவு அடையச்செய்ய விவசாயிகளின் பங்களிப்பு அவசியம் என பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார்.
2022.12.10 அன்று பாதுக்க மற்றும் பிரண்டிகம்பல பிரதேசத்தில் நடைபெற்ற விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஹதபிம அதிகாரசபையினால் இதன்போது பயிர்ச்செய்கை உபகரணங்கள் விநியோகிக்கப்பட்டது. வீட்டுத்தோட்டச் செய்கைக்கான பயிற்சி மற்றும் மேற்பார்வையுடன் கூடிய திட்டமிடப்பட்ட வேலைத்திட்டம் ஹதபிம அதிகாரசபையால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர் அவர்கள்,
"எமது நாடு ஒரு சவாலான காலகட்டத்தை எதிர்கொள்கிறது. சிரமங்களை எதிர்கொண்டு, மீண்டும் ஒரு நாடாக எழுச்சி பெற, இந்த சவாலை வெற்றிகொள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒன்றிணைய வேண்டும். புள்ளிவிவரங்களினால் சொல்லப்படுவதை விட இது மிகவும் யதார்த்தமானது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

கிராமிய மறுமலர்ச்சி திட்டங்கள் மற்றும் நாட்டைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை ஒருங்கிணைத்து வீட்டுத்தோட்டம், உணவு உற்பத்தி மற்றும் கால்நடை உற்பத்தித் திட்டங்களை வெற்றிபெறச்செய்ய வேண்டும். குறிப்பாக கோழி உற்பத்தியில் குடும்பம் குடும்பமாக பங்கேற்க வேண்டும். இத்திட்டம் சரியாக செயற்படுத்தப்பட்டால், புள்ளி விவரங்களில் உள்ள ஆச்சரியத்தை முறியடிக்கலாம்.

எமக்கு செயற்படமுடியுமான இந்தக் காலத்தை விட்டுவிட வேண்டாம் என்று பிரதேச செயலாளரை கேட்டுக் கொள்கிறேன். இன்று, சீனா உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வந்த நாடுகளில் ஒன்றாகும். சுமார் 25 ஆண்டுகால சீனாவின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் எவருக்கும், கிராமம் கிராமமாக விவசாயிகள் தொடங்கிய பணியின் மூலம் சீனா உலகப் பொருளாதார வல்லரசாக மாறியுள்ளது என்பது புரியும். 800 மில்லியன் சீன மக்களை வறுமையில் இருந்து ஒரு நாடாக மாற்ற விவசாயம் சிறப்பான பங்களிப்பைச் செய்தது.

மேலும் இந்தியாவும் எமது நாடு சிரமங்களுக்கு மத்தியில் தன்னிறைவுடன் எழுந்திருப்பதற்கு துணை நிற்கிறது. இவை நாம் அனைவரும் பெற்றுக்கொள்ளக்கூடிய அயலவர்களின் பாடங்கள். பூமியின் அருட்கொடையை அறுவடை செய்யக்கூடிய கிராமங்களில் வாழும் உணவை உற்பத்தி செய்வதற்கான எமது ஆற்றலைச் சேகரிப்போம். தேவை இருந்தால், ஆதரவு வழங்கும் பல அமைப்புகள் உள்ளன. எமது அன்றாடத் தேவைகளில் பத்து சதவிகிதத்தை நாமே செய்துகொள்ள முடிந்தால், அது எமது பொருளாதார வலிமைக்கு பங்களிப்பதுடன், அந்நியச் செலாவணியையும் மீதப்படுத்துகிறது. அப்படித்தான் நாம் சிந்திக்க வேண்டும். இப்பகுதி நெல் விவசாயத்திற்கும் ஏனைய பயிர்களுக்கும் பெயர் பெற்றது.

விவசாயிகள் உரம் கேட்டனர். அதுபோலவே அரசு உரத்தினை கொண்டு வந்தது. நாட்டை தன்னிறைவு அடையச் செய்யவே வெளிநாட்டு கடன் பெற்று உரங்கள் கொண்டு வரப்படுகின்றன. விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு நாங்கள் முன்னுரிமை அளித்தோம், இப்போது விவசாயிகள் நாட்டின் தன்னிறைவுக்கான முயற்சிகளுக்கு உரம் சேர்க்கிறார்கள். கால்நடை பண்ணை விவசாயம் வீழ்ச்சியடைவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கால்நடை தீவன விலை உயர்வு குறித்து கலந்துரையாடியுள்ளோம். கால்நடை உணவுகளை தேவையான அளவில் கிடைக்கச்செய்யும் வகையில் அரசு நிவாரணங்களை வழங்குவதில் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்தும் கடன் பெற்று அந்த கடனை செலுத்தவும் கடனை பெறுவதன் ஊடாக முன்னோக்கிச் செல்ல முடியாது. இப்படிச் சிந்தித்தமையால்தான் இன்று சீனா, இந்தியா போன்ற நாடுகள் உலகின் ஜாம்பவான்களாக மாறி வருகின்றன. நாம் ஒரு சிறிய நாடு. அதற்குத் தேவையான பின்னணியும் கால நிலையும் எங்களிடம் உள்ளன. 104 ஆறுகள் உள்ளன. சுமார் 40,000 குளங்கள் இருந்தாலும் அவற்றில் தற்போது 20,000 குளங்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. இந்த பூமியின் வரலாற்றுப் புத்தகங்களைப் படித்தவர்கள் இங்கே இருக்கிறார்கள். வரலாற்றுப் புத்தகத்தைப் படித்துவிட்டு வெளியே வருகிறோம். ஒவ்வொரு பாடசாலையிலும், நம் ஆசிரியர்கள் பெருமையுடன் நம் வரலாற்றைக் கற்பிக்கிறார்கள். நாம் இதை செய்ய முடியும்.

ஓரிரு அலங்கார மீன்கள் கிராமங்களை நிறுவமுடியுமானால், நம் நாட்டிற்கு அதிக அளவில் அந்நிய செலாவணியை கொண்டு வர முடியும். இந்த விடயங்களில் புதிதாக ஆர்வமுள்ள இளம் தலைமுறையை ஒன்று திரட்ட வேண்டும். உயர்தரப் பரீட்சைக்குப் பின் எதுவும் செய்யாத பிள்ளைகள் எத்தனை பேர்? எனவே புள்ளிவிவரங்களை பாரம்பரிய வழியில் பார்க்க வேண்டாம். 1000 பிள்ளைகள் பாடசாலையை விட்டு வெளியேறும்போது, அதில் ஒரு பகுதி ஏதாவது ஒன்றில் இணைந்துகொள்கிறது. மற்ற பகுதி புதியவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்.

எங்களுக்கு தேவை இருந்தால், பங்களிக்க பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. இந்த பிரதேசத்தில் இணைந்து செயற்படக்கூடிய தனியார் துறை உள்ளது. அந்த நிறுவனங்களை அழைத்து பேசுங்கள். பாரம்பரியத்தைத் தாண்டி மனிதாபிமானத்தைப் பற்றி பேசுவோம். நாம் மக்களை பட்டினி போட முடியாது. எமது மக்களை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் இருந்து காப்பாற்ற இந்த வேலைத்திட்டத்தில் நாம் வெற்றிபெற வேண்டும்.

இலங்கையில் முட்டைக்கான தேவை அதிகமாக இருக்கும் காலம் இது. ஆனால் அந்த தேவையை நிறைவேற்ற முடியாதுள்ளது. முட்டை விலை உயர்ந்து வருகிறது. ஒரு சில கோழிகளை வைத்திருப்பது வீட்டில் புரத மரம் இருப்பது போன்றது. எமது பூமி வளமானது. வலுவூட்டினால் மக்கள் மீண்டும் தலை நிமிர்ந்து வருமானம் ஈட்டும் வழிகளில் நுழைவார்கள்.

இந்த முயற்சிகள் ஒவ்வொன்றாக வெற்றி பெற்று வருகின்றன. ஒவ்வொரு கிராமமும் இத்திட்டத்தில் இணைந்தால், அனைத்து 14000 கிராம சேவை பிரிவுகளையும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ளலாம். கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் தற்போது கோழிகள் வளர்க்கப்படுகின்றன. கொழும்பு மாநகரில் உள்ள அடுக்குமாடி வீடுகள் பூந்தொட்டிகள் மூலம் விவசாயம் செய்து தமக்கான உணவை தாங்களே தயாரித்துக் கொள்ளும் நிலைமைக்கு மாற்றமடைந்து வருகின்றது.

நாம் உணவில் தன்னிறைவு அடைவதன் மூலம் இந்த சவாலை வெற்றிகொள்ள முடியும். வேரகலை கிராமிய வைத்தியசாலை கைவிடப்பட்டுள்ளது. தயவு செய்து அதன் நிலைமைகளை ஆராய்ந்து விவசாய நடவடிக்கைகளுக்காக கிராமிய இளைஞர்களிடம் இரண்டு வருடங்கள் ஒப்படையுங்கள். உரிமை பத்திரங்களைத் தேடி தேடி காலத்தை கடத்த வேண்டாம். இது அரசுக்கு சொந்தமானது என்பதற்கு நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளன. இந்த பிரதேசத்தில் இதுபோன்ற பல இடங்கள் மற்றும் காணிகள் உள்ளன.

மின்சாரக் கட்டணம் அதிகம் என்று எல்லா இடங்களிலும் சொல்லப்படுகிறது. அது நியாயமானது. இதற்கான மாற்று வழியை எப்படி கண்டுபிடிப்பது என்பது குறித்து கலந்துரையாடப்படுகிறது. இப்பயணத்தில் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்டு நாட்டை ஓரளவுக்குக் கொண்டு சென்றால் அடுத்த போகத்திற்குப் பின்னர் வெற்றியை அடைய முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதற்காகவே நீங்கள் அனைவரும் இந்தப் பங்களிப்பைச் செய்கிறீர்கள்.

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் உற்பத்தித்திறன்வாய்ந்த உணவு உற்பத்தி மற்றும் பயனுள்ள ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, சீதாவக்க பிரதேச சபையின் தலைவர் ஜயந்த ரோஹன, இலங்கை ஹதபிம அதிகாரசபையின் தலைவர் சரத் விதான உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.