பங்களாதேசத்தின் வெளிவிவகார அமைச்சின் வெளிநாட்டுச் செயலாளரும் தூதுவருமான அசாத் ஆலம் சியாம் (Asad Alam Siam) உள்ளிட்ட தூதுக்குழு நவம்பர் 6ஆம் திகதி அலரி மாளிகையில் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களைச் சந்தித்தது.
வெளிநாட்டுச் செயலாளரையும் அவரது தூதுக்குழுவினரையும் வரவேற்ற பிரதமர், தற்போதைய பிராந்திய நிலைமைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொதுவான நலன்கள் குறித்துக் கலந்துரையாடினார். இதன்போது பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நல்லாட்சி ஆகிய விடயங்களுக்கு விசேட முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
நிறுவனச் சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தையும், பயனுள்ள மற்றும் வெளிப்படையான நிர்வாக முறைமைகளை பலப்படுத்துவதற்கு ஊழலை ஒழிப்பதன் தேவையையும் பிரதமர் வலியுறுத்தினார். இரு தரப்பினரும் ஆர்வம் கொண்டிருக்கும் துறைகளில் இலங்கைக்கும் பங்களாதேசத்திற்கும் இடையிலான மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்புக்கான சாத்தியப்பாடு குறித்தும் ஆராயப்பட்டது.
இந்தச் சந்திப்பில் இரு நாடுகளினதும் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
பங்களாதேசத் தூதுக்குழுவில் இலங்கைக்கான வங்காளதேச உயர்ஸ்தானிகர் அந்தலிப் இலியாஸ் (Andalib Elias), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் திருமதி இஷ்ரத் ஜஹான் (Ishrat Jahan), வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் (FSO) மனூவர் முகர்ரம் (Manuar Mukarram), வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திரு. மொஹமட் நஹித் ஜஹாங்கீர் (Mohammad Nahid Zahangir) ஆகியோர் இடம்பெற்றனர்.
இலங்கைத் தூதுக்குழுவில் பங்களாதேசத்திற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் கௌரவ தர்மபால வீரக்கொடி, பிரதமரின் மேலதிகச் செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த, தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு