காங்கிரீட் கட்டிடங்களை அமைப்பதன் மூலம் மாத்திரம் மக்களின் வாழ்க்கையை அழகாக மாற்ற இயலாது என்றும், நகரமானது அங்கு வாழும் மனிதர்கள் மற்றும் விலங்குகள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பும் உரிமையும் கொண்ட இடமாக அமைய வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" கொள்கைக்கு அமைவாக முன்வைக்கப்பட்ட "நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை" எனும் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு இணையாகச் செயற்படுத்தப்படும் "Life Cities" (வாழ்வியல் நகரங்கள்) அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வில் உரையாற்றியபோதே செப்டெம்பர் 11ஆம் திகதியன்று, கொழும்பில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
வாழ்வியல் நகரங்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் திட்ட வரைவை, இத்திட்டத்திற்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் பிமல் ரத்நாயக்க மற்றும் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர ஆகியோர் பிரதமரிடம் கையளித்தனர்.
அதனைத் தொடர்ந்து முதற்கட்டத்தின்கீழ் அபிவிருத்தி செய்யப்படும் மாத்தறை, மட்டக்களப்பு, மாத்தளை, வவுனியா, பதுளை, யாழ்ப்பாணம், சிலாபம், ஹட்டன், தலாவ மற்றும் எஹெலியகொட ஆகிய நகரங்களின் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளிடம் அத்திட்ட வரைவு வழங்கப்பட்டது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,
இன்று ஊடகங்களிலும் மக்கள் மத்தியிலும் போக்குவரத்து அமைச்சு ஒரு பிரதான தலைப்பாக மாறியிருக்கின்றது. போக்குவரத்து அமைச்சின் ஊடாக நடைமுறைச் சாத்தியமான மற்றும் மக்களுக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான திட்டங்கள் செயற்படுத்தப்படுவதே இதற்குக் காரணமாகும். ’Life Cities’ என்பதும் அத்தகையதொரு திட்டமாகும்.
காங்கிரீட் கட்டிடங்களை உருவாக்கிய மாத்திரத்திலேயே மக்களின் வாழ்க்கை அழகாகிவிடாது. கொழும்பு மாவட்டம் இதற்குச் சிறந்த உதாரணமாகும். நமது நாட்டின் நகரங்கள் சரியான முறையில் விரிவாக்கமடையவில்லை; மிகவும் ஒழுங்கற்ற முறையிலேயே விரிவாக்கமடைந்திருக்கின்றன.
இலங்கையின் சனத்தொகையில் 44.5% ஆனோர் இவ்வாறான ஒழுங்கற்ற இடங்களிலேயே வாழ்கின்றனர். இவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகப் பல்வேறு காலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. நகரங்களை அழகுபடுத்துவதற்காகச் சிலர் நகரத்திலிருந்து அகற்றப்பட்டனர். அதன் விளைவுகளை நாம் இன்றளவும் அனுபவித்து வருகின்றோம். பாரம்பரிய கிராமம் மற்றும் நகரம் பற்றிப் பேசும்போது நகரம் மிகவும் சிக்கலானது, விசித்திரமானது. ஆனால் நகரம் ஒரு பிரிவினருக்கு மாத்திரமே சொந்தமானது எனும் அடிப்படையில் இருந்துகொண்டு அபிவிருத்தி செய்வது மிகவும் தவறானதாகும். காரணம், நகரம் அனைவருக்கும் சொந்தமானதாகும்.
’Life Cities’ திட்டத்திற்காக நகரங்களைத் தெரிவு செய்யும்போது மிகவும் வெளிப்படைத்தன்மை கொண்ட புள்ளி வழங்கும் முறையைப் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு தனித்துவம் இருக்கின்றது. அந்தத் தனித்துவத்தைத் தக்கவைக்கும் வகையில் செயற்பட வேண்டும். சேவைகளுக்கான அணுகல் வாய்ப்புகள் போன்றே அவற்றின் தரத்தைப் பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டும். அதேபோன்று நகரம் என்பது ஒரு காங்கிரீட் காடு அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். நகரத்தில் வாழும் மனிதர்களைப் போன்றே விலங்குகளும் அந்த நகரத்தின் பங்குதாரர்களாவர். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உள்ள நகரத்தினையே நாம் உருவாக்க வேண்டும். மக்களைப் பற்றிச் சிந்திக்காது நகரங்களை அபிவிருத்தி செய்ய இயலாது," எனத் தெரிவித்த பிரதமர், வாழ்வியல் நகரங்கள் அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் அவை அனைத்தின்மீதும் கவனம் செலுத்தப்படும் என நம்புவதாக கூறினார்.
இங்கு உரையாற்றிய போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
"மாகாணங்களில் தலைமைத்துவம் வகிக்கும் அமைச்சர்கள், ஆளுநர்கள் போன்றே அதிகாரமுள்ளவர்களுக்கே நகரங்களை அபிவிருத்தி செய்வது மிகவும் இலகுவானதாகும். சில நகரங்களின் ஆன்மாவாகப் பாடசாலை இருக்கலாம், அல்லது வேறு ஒரு இடமாக இருக்கலாம். எனவே நகர அபிவிருத்தி என்பது சரியான புரிதலுடன் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். உருவாக்கப்படும் ஒவ்வொரு இடமும் மக்களுக்குச் சிறந்த இடமாக மாற்றப்பட வேண்டும். ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் மக்களைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் சிந்திக்கும் விதம் நமது வேலைத்திட்டத்தின் இலச்சினையிலேயே தெளிவாக இருக்கின்றது. நகரம் என்பது கட்டிடங்கள் மாத்திரமல்ல எனும் சாராம்சம் அதற்குள் இருக்கின்றது.
நிம்மதியாக இருக்கக்கூடிய இடமாக ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நகரத்தின் இன்றைய நிலைமை வேறுபட்டிருக்கின்றது. எனவே நகரத்திற்கே உரித்தான தனித்துவமொன்று இருக்க வேண்டும். அதற்குத் தேவையான ஒத்துழைப்பை அந்த நகர சபையும் மாகாண சபையுமே வழங்க வேண்டும். நாம் முதலில் 10 நகரங்களைத் தெரிவு செய்தோம். அந்த நகரங்களுக்குள் மக்கள் வாழ்வதற்குப் பொருத்தமான, மக்கள் மையப்பட்ட, நிலையான அபிவிருத்தியை நாம் முன்னெடுப்போம். இலங்கை முழுவதிலும் உள்ள 26 நகரங்களை அவ்வாறு அபிவிருத்தி செய்வதற்காக நாம் 65 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம்.
இந்தத் திட்டங்கள் அனைத்தும் நமது ’வளமான நாடு - அழகான வாழ்க்கை’ எனும் கொள்கைக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதேபோன்று இவற்றை நாம் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாது, செயலிலும் செய்கின்றோம் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாக வேண்டும். நகராதிபதிகள் அந்த நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும். நிதியை நாம் ஒதுக்கியுள்ளோம். நாளையிலிருந்து பணிகளை ஆரம்பியுங்கள். நகராதிபதிகள் வெளிப்படுத்தும் முன்னேற்றத்திற்கு ஏற்ப அடுத்தகட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்படும்," எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மாகாண ஆளுநர்கள், புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி, வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர, நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, அமைச்சுக்களின் செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர், நிர்வாக நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு