தமது பதவிக் காலத்தை நிறைவுசெய்யும் இலங்கைக்கான கொரியக் குடியரசின் தூதுவர் மியொன் லீ அம்மையார், ஜூலை 28 ஆம் திகதி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்.
இதன்போது, தூதுவரை வரவேற்ற பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்காகத் தமது பதவிக் காலத்தில் தூதுவர் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புகளுக்காகத் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன், நீர்ப்பாசனம் மற்றும் கல்வி உள்ளிட்டக் கொரியக் குடியரசின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் ஊடாக இலங்கைக்குத் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் ஒத்துழைப்புகள் தொடர்பில் கொரியக் குடியரசுக்குப் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளினதும் பரஸ்பர நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தரமான முதலீடுகளை ஈர்த்தல், இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துதல் என்பவற்றின் மீது இலங்கை கவனம் செலுத்தி வருவதாகப் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
கொரியக் குடியரசின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் உட்பட, விவசாயம் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய துறைகளில் நிலவும் தற்போதைய மற்றும் எதிர்கால ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இலங்கைக்கும் கொரியக் குடியரசுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் வழங்கிவரும் ஆதரவிற்குத் தூதுவர் மியொன் லீ அம்மையார் இதன்போது தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
இந்நிகழ்வில் கொரியக் குடியரசுத் தூதரகத்தின் பிரதித் தலைவர் யுன்ஜி காங் அம்மையார், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த ஆகியோருடன், வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு