ஊழல் எதிர்ப்புச் சட்டத் திருத்தம் அதனைப் பலவீனப்படுத்துவதற்கு அல்ல, மாறாக, பலப்படுத்துவதற்கே - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

எதிர்க்கட்சியினர் மக்களைத் திசைதிருப்பி, பழைய ஊழல் அரசியல் கலாசாரத்தைப் பாதுகாக்க முயல வேண்டாம்

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தமைக்குக் காரணம், அதன் நோக்கங்களைப் பலவீனப்படுத்துவது அல்ல; மாறாக, அச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது இனங்காணப்பட்ட நடைமுறை, நிறுவன ரீதியான மற்றும் மனிதவளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஊழல் எதிர்ப்புச் செயன்முறையை மேலும் பலப்படுத்துவதே ஆகும் என, ஒக்டோபர் 08 ஆம் திகதி ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் உரையாற்றும்போது பிரதமர் வலியுறுத்தினார்.

1994 ஆம் ஆண்டிலிருந்து ஊழல் எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் அதற்கான நிறுவனங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்த போதிலும், அந்நிறுவனங்கள் பெயரளவில் மாத்திரமே இயங்கி வந்தன என்றும், அவற்றை வினைத்திறனாகச் செயற்படுத்துவதற்குத் தேவையான மனிதவளம், நிதி ஒதுக்கீடுகள், வளங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கவில்லை என்றும் பிரதமர் இங்கு சுட்டிக்காட்டினார்.

2023 ஆம் ஆண்டில் புதிய ஊழல் எதிர்ப்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், 2025 ஆம் ஆண்டிலிருந்து அதனைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தத் தொடங்கிய பின்னரே, அதனைச் செயற்படுத்தும்போது எழுந்த பிரச்சினைகளை இனங்காண முடிந்தது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அதற்கமைய, தேவையான மனிதவளத்தை ஆட்சேர்ப்புச் செய்தல், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பதிப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளைச் சரிசெய்தல், சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எழும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றுக்காகவே தற்போதைய திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அத்துடன், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் வெளிப்படுத்தல் தொடர்பில், அரச அதிகாரிகள் உட்பட அரசாங்கத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினரதும் தனிப்பட்ட சுதந்திரம் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனக் கலந்துரையாடப்பட்ட போதிலும், ஆரம்பத்திலிருந்தே, தற்போதைய திருத்தங்கள் மூலமாகவும், மக்கள் பிரதிநிதிகளை அப்பொறுப்புகளிலிருந்து விலக்கும் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் ஊழலற்ற கலாசாரம் உருவாவதும், அது பயனுள்ள முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதும் தொடர்பாக எதிர்க்கட்சிக்குள் காணப்படும் பதற்றமும் அசௌகரியமும் இக்கூற்றுகளிலிருந்து தெளிவாகின்றன, எனவும் அவர் கூறினார்.

அத்தோடு, மக்கள் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக, மக்களின் பணத்தைத் துஷ்பிரயோகம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது மாத்திரமன்றி, அத்தகைய செயற்பாடுகளால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை மீண்டும் அரசாங்கத்துக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதும் இருந்து வந்ததை நினைவூட்டிய பிரதமர், தற்போதைய திருத்தங்கள் மூலம் அதனை உறுதிப்படுத்தும் நோக்கமும் இச்சீர்திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

ஆகையால், ஊழலுடன் தொடர்புடையவர்களுக்குத் தண்டனை வழங்கும் செயன்முறைக்கு மேலதிகமாக, அரசாங்கத்துக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்குத் தேவையான பொறிமுறைகளைப் பலப்படுத்துவதும் இத்திருத்தங்களின் ஒரு நோக்கமாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், "இது ஊழல் எதிர்ப்புச் செயன்முறையைப் பலவீனப்படுத்துவது அல்ல, மாறாக, அதனை நடைமுறைப்படுத்தும்போது எழும் நடைமுறை, நிறுவன ரீதியான மற்றும் மனிதவளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முயற்சியாகும். ஊழலுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டு, நம்மால் எதனையும் வெல்ல இயலாது. அவ்வாறு கைவிட்டால், அது நமது தோல்வியாகும்" என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

ஊழலுக்கு எதிராகப் பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்ற ஒரு நாட்டில், எதிர்க்கட்சியினர் போலியான காரணங்களை முன்வைத்து மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பது மிகவும் வருந்தத்தக்கது என்றும், இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் எதிர்க்கட்சியினர் மீண்டும் ஒரு ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தைப் பாதுகாக்கவே முயல்கின்றனர் என்பது மட்டுமே புலப்படுகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு