பாடசாலை மாணவர்களின் கல்வி, மற்றும் உயிர்களைப் பாதுகாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தினதும் பொறுப்பாகும் அது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் மாத்திரம் பொறுப்பல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
மஹவ, வலகஸ்வெவ குணபால மலலசேகர மாதிரி வித்தியாலயத்தின் புதிய இருமாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
1936 ஆம் ஆண்டு பன்சலைக்குச் சொந்தமான பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் அரச பாடசாலையாக மாறிய இப்பாடசாலையானது, பல்வேறு காரணங்களினால் 2004 ஆம் ஆண்டு மூடப்பட்டது. எவ்வாறாயினும், மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை, இன்று சுமார் 1300 மாணவர்கள் கல்வி கற்கும் ஒரு சிறப்பான கல்வி நிறுவனமாக வளர்ந்திருக்கின்றது.
விழாவில் உரையாற்றிய பிரதமர்,
இப்பாடசாலையை மேம்படுத்துவதற்கு அரசாங்கத்தின் தலையீட்டிற்கு அப்பால், அப்பகுதி மக்கள் மற்றும் பாடசாலையின் நலன்விரும்பிகள் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்ட வேண்டும். பாடசாலை மாணவர்களின் கல்வியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது அரசாங்கத்தினதும் ஆசிரியர் குழாமினதும் பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த நாட்டு மக்களினதும் பொறுப்பாகும். 2026 ஆம் ஆண்டளவில் அடிப்படை வசதிகள் அற்ற பாடசாலைகள் இருக்கக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதோடு, அதற்கான பணிகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
புத்திசாலி மற்றும் புத்திசாலியற்ற மாணவர்கள் என எவரையும் வகைப்படுத்த இயலாது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கவே செய்கின்றது. அந்தத் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை வளர்த்தெடுப்பதே கல்வி முறைமையின் பொறுப்பாகும்.
அரசாங்கம் மேற்கொள்ளும் அனைத்து முதலீடுகளினதும் இறுதி நோக்கம், நடைமுறைச் சிந்தனை கொண்ட, ஆக்கத்திறன் மிக்க உறுதியான பிரஜைகளை உருவாக்குவதேயாகும். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் மூலம், உலகில் உருவாகி வரும் புதிய துறைகளை வெற்றிகொள்வதற்கான வாய்ப்பை நாம் பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறோம், என பிரதமர் தெரிவித்தார்.
376 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய இருமாடிக் கட்டிடத்தில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஓர் அலுவலக அறை உள்ளடங்குவதுடன், இவ்வருட இறுதிக்குள் இதன் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா ஹேரத், மஹவ பிரதேச சபை தலைவர் சுமேத குமார, வடமேல் மாகாண பிரதம செயலாளர் சந்தன வன்னிநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள், வடமேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ஐ.எம்.ஏ. ஜின்னா உள்ளிட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் அதிபர், ஆசிரியர் குழாமினர் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு