“தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளிலிருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல; மாறாக அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒன்றாகவே இருக்கின்றது. இந்தத் தடைகளை நிவர்த்தி செய்வதற்கு, பெண்கள் தன்னம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய சாதகமான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைத்தல் வேண்டும்.” - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

சுவிட்சர்லாந்தின் Davos-Klosters நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தின் 56ஆவது வருடாந்தக் கூட்டத்திற்குச் சமாந்தரமாக, ஜனவரி 21ஆம் திகதி, ’World Woman House’ உலகப் பெண்கள் இல்லத்தில் நடைபெற்ற World Woman Davos Agenda 2026 நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தார்.

“Women Leading the Changing Global Order” (மாற்றம் கண்டு வரும் உலகளாவிய ஒழுங்குமுறைகளை வழிநடத்தி வரும் பெண்கள்) என்ற கருப்பொருளின் கீழான உயர்மட்ட அமர்வில் உரையாற்றிய பிரதமர், உலகெங்கிலும் உள்ள பெண்கள் அரசியல், பொருளாதார மற்றும் சமூகத் தளங்களில் அதிகளவில் தங்களது ஈடுபாட்டை உறுதிப்படுத்தி வருகின்ற போதிலும், அவர்களின் பங்களிப்புகள், குறிப்பாக ஊதியமற்ற பராமரிப்புப் பணிகள், முறைசாரா உழைப்பு மற்றும் விவசாயத் துறைகளில் தொடர்ச்சியாகக் கட்டமைப்பு ரீதியாகக் குறைத்து மதிப்பிடப்படுவதாகக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, தீர்மானங்களை இயற்றும் செயல்முறைகளில் இருந்து பெண்கள் புறக்கணிக்கப்படுவது தற்செயலானது அல்ல, அது பாலின அடிப்படையிலான அதிகாரப் படிநிலைகளின் ஊடாகக் கட்டமைப்பு ரீதியாகப் பேணப்பட்டு வருகின்ற ஒரு விடயமாகும். தலைமைத்துவத்தில் இருக்கும் பெண்கள் மீதான தாக்குதல்கள், குறிப்பாக அரசியலில் அவர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல்கள், Character Assassination (தன்மைப் படுகொலை) மற்றும் திட்டமிட்ட ஓரங்கட்டப்படுதல் போன்றவை, தலைமைத்துவத்தை இலக்காகக் கொண்ட பெண்கள் உட்படத் தகுதியுள்ள பலரை அரசியலிலிருந்து விலகச் செய்கின்றன அல்லது பங்கெடுப்பதைத் தவிர்க்கச் செய்கின்றன. இது ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள ஆணாதிக்கக் கட்டமைப்புகளை மேலும் பலப்படுத்துகின்றது.

இந்தத் தடைகளை அகற்றுவதென்பது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது மாத்திரமல்ல, மாறாக, பெண்கள் தன்னாதிக்கம், அதிகாரம் மற்றும் நம்பிக்கையுடன் தலைமைத்துவத்தை முன்னெடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்காக நிறுவனங்களையும் அதிகாரக் கட்டமைப்புகளையும் மாற்றி அமைப்பதேயாகும்.

மக்களின் மீண்டெழுதலுக்கான உத்வேகமும், அரசியல் அர்ப்பணிப்பும் இணையும்போது எதனைச் சாதிக்க முடியும் என்பதற்கு இலங்கை ஒரு சிறந்த உதாரணமாகும். எமது தற்போதைய அனைவரையும் அரவணைக்கும் அரசாங்கத்தின் கீழ், அரசியல் பிரதிநிதித்துவத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முதல் முறையாக 20 பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அர்ப்பணிப்பு வெறும் தொலைநோக்கினை மாத்திரம் பிரதிபலிக்கவில்லை; இது மேலும் அரவணைப்புமிக்க ஒரு நிர்வாகத்தை நோக்கிய மாற்றத்தையே அடையாளப்படுத்துகின்றது.

தலைமைத்துவம் என்பது ஏற்கனவே உள்ள இடங்களில் அமர்வது மாத்திரமல்ல, மாறாக அந்த அமைப்புகளையே மறுசீரமைப்பதாகும் எனக் கூறிய பிரதமர், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தினார். அத்துடன், எதிர்கால உலக ஒழுங்கை வடிவமைக்கும் கொள்கைகளில் பெண்களும் சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்களும் வெறும் பங்காளர்களாக மாத்திரமன்றி, அதன் முதன்மை வடிவமைப்பாளர்களாக இருப்பதை உறுதி செய்யுமாறு உலகளாவிய தரப்பினருக்கு அழைப்பு விடுத்தார்.

பிரதமர் ஊடகப் பிரிவு