இந்த வரவுசெலவுத் திட்டத்தில் சகல துறைகளும் உள்வாங்கப்பட்டிருக்கின்றன. - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அரசாங்கம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை.

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாட்டின் அனைத்துத் துறைகளும் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும், அரசாங்கம் குறுகிய கால நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையிலோ அல்லது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ செயல்படுவதில்லை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் தெரிவித்தார்.

2026ஆம் ஆண்டுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், பிரதமர் நவம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

"ஜனாதிபதி அவர்கள் வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும்போது, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாட்டினைச் சற்று ஒதுக்கி வைத்துவிட்டுச் சரியாகச் செவிமடுத்திருந்தால், அவரது உரையிலும், சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டத்திலும் நம் அனைவருக்கும் பார்க்கவும், கற்றுக்கொள்ளவும் பல விடயங்கள் இருந்தன.

அதன் உள்ளடக்கத்தைப் போலவே, அந்த விடயங்கள், அந்த முன்மொழிவுகள், அந்தப் புள்ளிவிவரங்கள் ஆகிய அனைத்திற்கும் பின்னால் மிகவும் முக்கியமான ஒரு கதை இருக்கின்றது. அந்தக் கதையைச் சரியாகப் புரிந்துகொள்ள அனைவரும் முயற்சி செய்யுங்கள் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

திட்டமிடல் சரியாக இடம்பெறும் போது கொள்கைகள் மற்றும் திட்டங்களை இயற்றுவது மாத்திரம் இன்றி, சட்டங்கள் சரியாக நடைமுறைப்படுத்தப்படும்போது, இலக்குகளை முதன்மைப்படுத்திய தலைமைத்துவத்துடன், அரசியல் ஒழுக்கத்துடன் ஆட்சி செய்வதன் மூலம் அதன் பெருபேறுகளை எவ்வாறு பெறுவது, ஒரு நாடு எவ்வாறு அபிவிருத்தி செய்கின்றது என்பதைப் பற்றிய மிகச் சிறந்ததொரு உரை வரவுசெலவுத் திட்டத்திலும், வரவுசெலவு உரையிலும் இருக்கின்றது. அதுவே இந்நேரத்தில் முக்கியமானதாகும்.

இது அரசாங்கத்தின் இரண்டாவது வரவுசெலவுத் திட்டமாகும். நாம் எமது முதலாவது வரவுசெலவுத் திட்டத்தை 2025 ஏப்ரல் மாதத்திலேயே சமர்ப்பித்தோம். ஆயினும் அதற்கு முன்னர் நாம் ஆட்சியைப் பொறுப்பேற்ற வேளையில் நாடு இருந்த நிலைமை, சர்வதேசத்தின் நிலைமை, அத் தருணத்தில் நாட்டு மக்கள் வெளிப்படுத்திய கருத்துகள் ஆகியன அந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு எமக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பற்றிய ஒரு நிச்சயமற்ற தன்மையே நிலவியது. அவ்வாறு நம்பிக்கைகள் சிதைந்திருந்த ஒரு தருணத்திலேயே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது.

வீழ்ந்து கிடந்த நாட்டைப் பொறுப்பேற்ற இந்த அரசாங்கம் ஏப்ரல் மாதத்திலேயே முதலாவது வரவுசெலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்தது. நேற்று சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியையே குறிக்கின்றன. அந்த வரவுசெலவுத் திட்டமானது ஒன்பது மாதங்களுக்காகவே சமர்ப்பிக்கப்பட்டது. ஆகையினால் மொத்தச் செலவினத்தை டிசம்பர் மாதத்திலேயே காட்டக் கூடியதாக இருக்கும்.

நாட்டை நிலைப்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ், நிதி ஒழுக்கத்துடன் நாட்டை நிர்வாகித்தல் மற்றும் ஆட்சிபுரிதல் ஆகியவற்றின் வெற்றியையே ஜனாதிபதி அவர்கள் நமக்குச் சுட்டிக்காட்டினார். அதனை நாம் பாராட்ட வேண்டும். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வேறுபாடு இன்றி அதனை ஏற்றுக்கொண்ட பின்னரே இதுபற்றி எம்மால் மேற்கொண்டு உரையாடக் கூடியதாகவும் குறை நிறைகளைப் பற்றிச் சுட்டிக்காட்டக் கூடியதாகவும் இருக்கும்.

இதுவரை நாம் ஆறு மாத காலத்திற்கான வரவுசெலவுத் திட்டத்தில் ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான முன்னேற்றத்தைக் காட்டியிருக்கிறோம். பொதுவாக, அரசாங்கம் அடுத்த இரண்டு மாதங்களில், அதாவது டிசம்பர் 31ஆம் திகதியை அடையும்போது இந்தச் செலவானது இதைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றது. காரணம் எமது செயற்திட்டங்கள் செப்டம்பர் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. ஆகையினால் அந்த அடிப்படையில் பார்ப்பதன் மூலம் நம்மால் மிகவும் சரியானதொரு புரிதலைப் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

வீழ்ந்து கிடந்த ஒரு நாட்டையே என்று நாம் இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறோம். இன்று திறைசேரி நிரம்பி வழிகிறது என எதிர்க்கட்சியினரே கூறுகிறார்கள். அரசாங்கம் நிதி ஒழுக்கத்தைப் பேணி வருகிறது. இவையனைத்தும் தற்செயலாக நிகழ்ந்தவை அல்ல. இவை தொலைநோக்குமிக்கத் தலைமைத்துவத்தின் விளைவுகளாகும். இந்தக் நேரத்தில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் பாராட்ட வேண்டிய விடயம் இதுவே என நான் நினைக்கிறேன்.

இங்கே நாம் சந்தோஷப்பட வேண்டிய இன்னுமொரு விடயமும் இருக்கின்றது. நாம் ஆட்சிக்கு வந்தபோது, ஏனைய அரசாங்கங்களைப் போல், எமது ஆட்களைக் கொண்டு நிறுவனங்களை நிரப்பவும் இல்லை. இடமாற்றங்களை மேற்கொள்ளவுமில்லை. எமது இந்த நிலைப்பாட்டைப் பற்றி சில சமயங்களில் எமது கட்சி ஆதரவாளர்களே எம்மைக் குறை கூறினார்கள். இருப்பினும் சரியான தலைமைத்துவத்துடனும், சரியான நோக்கத்துடனும், திட்டமிட்டுச் செயற்பட்டால், அதே அரச சேவையை, அதே அதிகாரிகளை, அதே தலைகளை வைத்துக் கூட எம்மால் சாதிக்க முடியும் என்பதை நாம் நிரூபிக்க வேண்டியிருந்தது. மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கவே செய்கின்றன. இதைவிடத் திறமையாகச் செயற்பட வேண்டுமா? ஆம் நிச்சயமாக இதைவிடச் சிறப்பாகச் செயற்பட வேண்டும்.

அரச சேவைக்கு நாம் பெருமளவு சலுகைகளை வழங்கியதற்கும், ஜனவரி மாதம் முதல் இரண்டாவது சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதற்கும், அத்தோடு அரச சேவையில் கிடைக்கப்பெற வேண்டிய ஏனைய சலுகைகளை, கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கும் காரணம் இன்னும் சிறப்பாகவும் திறமையாகவும் அவர்கள் செயற்பட வேண்டும் என்பதற்காகவே ஆகும். இந்த வரவுசெலவுத் திட்டத்திலும் அதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது.

அரச சேவையைத் திறமையான, மக்கள் நேயமான, திட்டமிடப்பட்ட, இலக்குகளை நோக்கிய சேவையாக மாற்ற வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். இதில் 2025 ஜனவரியை விட இன்று நாம் ஒரு முன்னேற்றத்தைக் காண்கிறோம். 2026 ஆண்டில் இதைவிட அதிகமான வளர்ச்சி, இதைவிட அதிகமான முன்னேற்றம், இதைவிட முற்றிலும் வேறுபட்ட திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாட்டைக் காண முடியும் என நாம் நம்புகிறோம். தனிப்பட்ட அல்லது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அல்லாமல், ஒரு குழுவாக, ஒரு கூட்டுச் செயற்பாடாக, நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்படும் திட்டமிட்ட பயணம் என்பதை, தற்போது ஏற்பட்டு வரும் இந்த மாற்றங்கள் மூலம் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். நாம் இந்த நாட்டின் ஆட்சியினை ஏற்ற வேளையில் எங்கிருந்து ஆரம்பித்தோம் என்பதை மறந்துவிட்டால் எம்மால், இதைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாது.

நாட்டிற்குத் தேவையான அபிவிருத்தியைப் பெற்றுக்கொள்வதற்கான திட்டமிட்ட பயணம் என்பதை இந்தக் காலகட்டத்தில் அரசாங்கம் மட்டும் அல்லாமல், அரச அதிகாரிகளும் மக்களும் புரிந்துகொண்டு இருப்பதனாலேயே எமக்கு இந்தப் பெறுபேறுகளைப் பெற முடிந்திருக்கின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். ஏனைய அரசாங்கங்கள் ஆட்சியைக் கைப்பற்றிய வேளையில் அவர்கள் செயல்பட்ட விதத்தையும், எமது அரசாங்கம் செயல்படும் விதத்தையும் வெறுமனே மேலோட்டமாக ஒப்பிட்டுப் பார்த்தால், ஏற்பட்டு வரும் மாற்றத்தையும், பரிமாற்றத்தையும் எளிதில் புரிந்துகொள்ள இயலாது என நான் நினைக்கிறேன். காரணம் நாம் பயணிக்கும் பாதை வித்தியாசமானதாகும் என்பதையும் நாம் இங்கே தெளிவாகக் கூற வேண்டும்.

நாம் குறுகிய கால தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலோ, தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையிலோ, அமைச்சர்களின் தற்பெருமையை வளர்த்துக் கொள்ளும், அல்லது தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காகவோ அமைச்சின் பின்னால் இருந்து செயற்படவில்லை. இது நாம் கூட்டு உணர்வுடன் உருவாக்கிய ஒரு திட்டமாகும். நாட்டைப் பற்றிச் சிந்தித்து உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும். அதற்கு அமையவே நாம் செயற்படுகிறோம். நமது நூற்று ஐம்பத்தி ஒன்பது அங்கத்தவர்களும் அதனைப் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். என்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு இருக்கிறது. அதனை நாம் நிறைவேற்றும்போதே எமது முழுத் திட்டத்தினையும் நம்மால் வெற்றி கொள்ள முடியும் என்பதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆகையினால் அதன்படியே நாம் செயற்பட்டு வருகின்றோம்.

எமதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தை எம்மை விட எதிர்க்கட்சியினறே நன்கு மனப்பாடம் செய்து வந்திருக்கிறார்கள் என நான் நினைக்கிறேன். அதன் பக்கங்கள், எண்கள், பந்திகள் ஆகிய அனைத்தையும் மனப்பாடம் செய்து வைத்திருக்கிறார்கள். இது எமது ஐந்து வருடத் திட்டம் என்பதையும், இந்த நாட்டைப் பற்றி எமக்கு நெடுங்கால நோக்கு இருக்கின்றது என்பதையும் மிகுந்த அன்புடன் நான் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.

இன்னும் ஐந்து ஆண்டுகளின் பின்னர் தேர்தல் வர இருக்கின்றது. அப்போது அத் தேர்தல் மேடைகளில் எமது முன்னேற்றம் குறித்து நாம் விவாதிப்போம்.

இன்று இந்த நாட்டின் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் எதிர்க்கட்சி குற்றம் சாட்டி வருகின்றது. ஜனநாயகத்திற்கு எங்கே ஆபத்து ஏற்பட்டிருக்கின்றது என நான் எதிர்க்கட்சியிடம் கேட்க விரும்புகிறேன். இந்தப் பாராளுமன்றத்திற்கு இருக்க வேண்டிய முழுமையான நிதிப் பொறுப்பு மீதான அதிகாரத்தினை நாம் முழுமையாகப் பெற்றுக் கொடுத்திருக்கின்றோம். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு எதிரானதா? சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, ஏற்றத்தாழ்வின்றி பாரபட்சம் காட்டாது சட்டத்தை நடைமுறைப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதா?

தற்போது, பல கட்சிக்காரர்கள் ஆகிய நீங்கள் ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். பல கட்சிகள் ஒரே கட்சியாக மாற்றம் பெறும்போது பலகட்சி முறைமைக்கு ஆபத்து ஏற்படவே செய்யும். அந்த வகையில், பலகட்சி முறைமையை ஆபத்தில் வீழ்த்தியிருப்பது உண்மையில் எதிர்க்கட்சியே. தமது கட்சிகளைப் பாதுகாப்பதில், தமது கட்சிகளைக் கட்டியெழுப்புவதில், தமது கட்சிகளை மக்கள் உணரும் விதத்தில், மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதத்தில் கட்டியெழுப்பத் தவறி இருப்பதனாலேயே இன்று நாட்டில் பலகட்சி முறைமைக்கு அச்சுறுத்தல் இருக்குமானால், அந்த அச்சுறுத்தல் எதிர்க்கட்சியின் மூலமே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

பலகட்சி முறைமையை இல்லாதொழிக்க அரசாங்கத்திற்கு எந்தவித அவசியமும் இல்லை. அதைச் செய்ய எமக்கு நேரமும் இல்லை. நாம் எதிர்க்கட்சிக்காக ஆட்சிக்கு வரவில்லை. இந்த நாட்டு மக்களுக்காக, இந்த நாட்டைக் கட்டியெழுப்பவதற்காக, இந்த நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவே நாம் ஆட்சிக்கு வந்திருக்கின்றோம். நாம் அதை இலக்காகக் கொண்ட ஒரு பயணத்தை மேற்கொள்கையிலேயே அரசியலில் மாற்றம் ஏற்படுகின்றது. அரசியலிலிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதில் மாற்றம் ஏற்படுகின்றது. இதுவே உண்மையில் இங்கே ஏற்பட்டுக்கொண்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாகும். அதாவது நாட்டின் அரசியல் கலாச்சாரத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. மக்கள் மீண்டும் அந்தக் பழைய முறைக்குத் திரும்பிச் செல்ல மாட்டார்கள். இந்தப் புதிய அரசியல் கலாச்சாரத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு, உங்களது கட்சிகள் இந்த மாற்றத்திற்கு அமையத் தம்மை மாற்றிக் கொள்ளாது பழையதிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும்வரை உங்களால் இதைப் புரிந்து கொள்ள இயலாது.

இந்த வரவுசெலவுத் திட்டத்தில் நாம் கைநழுவ விட்ட, புறக்கணித்த எந்தவொரு துறையோ, எந்தவொரு சமூகக் குழுவோ இல்லை என்பதை விசேடமாக இங்கே ஞாபகப்படுத்த விரும்புகிறேன். மிக நேர்த்தியாக, ஒவ்வொன்றாக, இந்த நாட்டில் உள்ள பிரச்சினைகளைச் சரியாக இனம் கண்டு, ஆதரவு தேவைப்படும் சமூகக் குழுக்களைச் சரியாக அடையாளம் கண்டு, ஒரு வருடத்திற்குள் அதற்காகச் செய்யக்கூடியது என்ன, மறுபுறத்தில் நீண்டகால அடிப்படையில் வரிசைப்படுத்தி, கட்டமைப்புரீதியிலான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சிந்தித்து, ஒரு வருடத்திற்குள் எம்மால் செய்யக்கூடியதை மிகவும் தெளிவாகவும், தர்க்கரீதியாகவும், திட்டமிட்டும் சமர்ப்பித்துள்ளோம். ஆகையினால் எந்தவொரு விடயத்தையும் கைவிட்டுச் சென்றிருக்கிறோம் எனக் கூற இயலாது.

நாடு நிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், அடுத்த கட்டமாக நாட்டின் வளர்ச்சியை எவ்வாறு அடைவது, நிரம்பி வழியும் திறைசேரியின் பணத்தை எவ்வாறு சரியாக முகாமைத்துவம் செய்து மக்களுக்கு அதன் நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பது, மறுபுறத்தில், மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடி வருவதைத் தடுப்பது எப்படி என்ற அனைத்தையும் சிந்தித்து இந்த வரவுசெலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது" என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் கூறினார்.

பிரதமர் ஊடகப் பிரிவு