இலங்கையைப் பொறுத்தவரை, இந்த மாற்றமானது ஒரு தேசிய முன்னுரிமையாகும்.
பிலிப்பைன்ஸின் கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரி (CPSC) மற்றும் இலங்கையின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த ’காலநிலைத் தன்மைகளுக்குத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமை வேலைவாய்ப்புகளுக்காக TVET முறைமைகளை மாற்றுதல்’ எனும் தலைப்பிலான சர்வதேச மாநாடு இன்று (மார்ச் 24) கொழும்பில் நடைபெற்றது. இதில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
மார்ச் 23 முதல் 27 வரை நடைபெறும் ’டிஜிட்டல், பசுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்திற்காக TVET முறைமையை உருமாற்றுதல்’ எனும் ஐந்து நாள் பிராந்திய வேலைத்திட்டத்தின் முக்கிய அங்கமாக இம்மாநாடு அமைகின்றது. இதில் பூட்டான், பீஜி, மலேசியா, மாலைதீவு, மியன்மார், நேபாளம், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய கொழும்புத் திட்ட (CPSC) உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, காலநிலைத் தன்மைகளைத் தாக்குப் பிடித்தல் மற்றும் பசுமைத் திறன் மேம்பாடு குறித்த உயர்மட்டக் கலந்துரையாடல்கள் மற்றும் அறிவுப் பகிர்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதிலும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதிலும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி (TVET) முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தத் துறையில் மாற்றங்களை ஏற்படுத்துவது இலங்கையின் தேசிய முன்னுரிமையாகும்.
கல்வி என்பது வெறும் அறிவைப் பரப்புவதுடன் நின்றுவிடாது, அது, தனிநபர் வாய்ப்புகள், கௌரவம் மற்றும் சமூகத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கும் ஆற்றலைப் பெற்றுக்கொடுப்பதாக அமைய வேண்டும்.
பாடத்திட்டங்களில் பசுமைத் திறன்களை உள்ளடக்குதல், புதிய பயிற்சி வசதிகளில் முதலீடு செய்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி நிறுவனங்களுக்கும் வளர்ந்து வரும் பசுமைத் தொழில்துறைகளுக்கும் இடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மையைக் கல்வி முறையில் ஒருங்கிணைக்க வேண்டும்.
பசுமை மாற்றத்தினால் உருவாகும் வாய்ப்புகள் இளைஞர்கள், இளம் பெண்கள், விசேட தேவையுடையோர் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்கள் உட்பட அனைவருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். எனத் தெரிவித்தார்.
மேலும், பிராந்திய மற்றும் சர்வதேசப் பங்களிப்புகளுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், அத்தகைய உறவுகளை உண்மையான நன்மைகளாகவும் செயற்திறன் மிக்க கூட்டுறவுகளாகவும் மாற்றுவதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் திரு. நாலக கலுவெவ, மேலதிக செயலாளர் (தொழிற்பயிற்சி) திருமதி சமந்தி சேனநாயக்க, கொழும்புத் திட்ட உத்தியோகத்தர் கல்லூரியின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் கலாநிதி சுரேஷ் கே. தமேஜா, TVET நிர்வாகிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பிராந்திய நாடுகளின் சர்வதேசப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
பிரதமர் ஊடகப் பிரிவு