ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றியிருக்கிறோம்! - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சமமான பிரவேசத்தைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும்.

ஜனாதிபதி நிதியத்தை உண்மையாகவே ஒரு மக்கள் நேய நிதியமாக மாற்றி, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சம வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பல்கலைக்கழகக் கல்வியைக் கற்கும் விசேட தேவையுடைய மாணவ, மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும் சரஸவி திரியோ அபிமன் 2026” வேலைத்திட்டத்தில் கலந்துகொண்டு, ஜூலை 11 அலரி மாளிகையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் விசேட தேவைகள் வகைப்பாட்டின் கீழ் அனுமதி பெற்ற 370 மாணவ, மாணவிகளுக்குத் தலா 100,000.00 ரூபாய் வீதம் நிதியுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதுடன், அதன் முதற்கட்டத்தின் கீழ் 236 மாணவர்களுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிரதமர்

விசேட தேவையுடைய Neurodivergent, Autism, Dyslexia போன்ற பாதிப்புகளுக்கு ஆளான, எந்தவொரு பிள்ளையையும் கல்வி முறையிலிருந்து புறந்தள்ளாது, அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்விக்கான சம வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் கொள்கையாகும். பல்கலைக்கழகங்களுக்குள் அவர்களுக்குத் தேவையான நடைமுறை ரீதியான பிரவேச வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் விசேட பொறுப்பு, துணைவேந்தர்கள் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

அத்தோடு, உதவி நுட்பவியல் தொழில்நுட்பங்கள் (Assistive technologies) ஊடாகக் கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், பொதுப் போக்குவரத்து மற்றும் பௌதிக உள்கட்டமைப்பு வசதிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி அளிக்கும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு வருகின்றது. இந்த மாணவ, மாணவிகள் நாட்டிற்குச் சுமையல்ல, மாறாக அவர்கள் நிலையான அபிவிருத்திக்குப் பங்களிக்கக்கூடிய மதிப்புமிக்க மனிதவளங்களாகும் என்பதை வலியுறுத்துவதோடு, அனைவரினதும் விழுமியங்களை ஏற்கும் ஒரு நாகரிகமான சமூகத்தை உருவாக்குவதே இதன் இறுதி நோக்கமாகும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே, பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பிரதமர் ஊடகப் பிரிவு